“நீட்” என்னும் நெருப்பு தமிழ்நாட்டில் அணையாமல் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. மாணவன் தனுஷின் தற்கொலையால் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. “நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இப்போது ஆரம்பமாகிறது; நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும் வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும்” என்று மாணவனின் மரணம் நிகழ்ந்த அன்றே அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது என்றும் கூறியிருந்தார். சொன்னது போலவே அதை சட்டப்பேரவையில் நிறைவேற்றியும் இருக்கிறார்.
தன் அறிக்கையில் ஸ்டாலின் சொன்ன முக்கியமான ஒன்று நீட் தேர்வில் பல்வேறு மோசடிகளும், தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை; இது கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீரவேண்டும் என்ற அவசியத்தை மேலும் வலுவடையச் செய்கிறது என்பது தான். கல்வி எப்போது மத்தியப் பட்டியலுக்கு போனது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாநில அரசுக்கான அதிகாரங்களின் பட்டியல் 11ல் மருத்துவம் உள்பட உயர்கல்வி படிப்புகள், பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சரி செய்கிறேன் என்ற பெயரில் 42வது சட்டதிருத்தத்தின் மூலம் 1976ல் கல்வியை மாநிலபட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றிவிட்டார் பிரதமர் இந்திராகாந்தி.
1993-ல், உன்னிகிருஷ்ணன் என்பவர் ஆந்திர மாநில அரசுக்கு எதிராகத் தொடர்ந்த ஒரு வழக்கில், கல்வி அனைவருக்கும் அடிப்படை உரிமை என்று கூறியதோடு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தன்னாட்சி மற்றும் சுயநிதிக் கல்லூரிகளை தனியாரும் தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல் போல் முளைத்தன. இந்த கல்லூரிகளுக்கு கட்டுப்பாடுகளை அரசு விதிக்கவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தாலும், அவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், கட்டுப்பாடுகள் ஏதுமின்றிக் கல்லூரிகள் முளைத்தன. அதனால், கல்வியின் தரம் கேள்விக்குறி ஆனது.
இதற்குக் கடிவாளம் போட முடிவெடுத்தது இந்திய மருத்துவ கவுன்சில். அதன் விளைவாக நாட்டில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் என்று ‘நீட்’ என்ற பொதுவான தேர்வை அமல்படுத்தப்போவதாக 2010 டிசம்பரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மெடிக்கல் கவுன்சிலின் அறிவிப்பு தங்கள் கவனத்திற்கு வராமல் வெளியாகிருக்கிறது என்று கூறியது காங்கிரஸ் அரசு தரப்பு. அரசுக்குத் தெரிந்து தான் வெளியானது என்று கூறியது மெடிக்கல் கவுன்சில். இரண்டு தரப்பும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாங்கள் நுழைவுத் தேர்வு வைத்து தான் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறோம். அப்படி இருக்க பொது நுழைவுத் தேர்வு அவசியமில்லாதது என்று கூறி தமிழ்நாடு அரசின் முடிவை தனியார் கல்லூரிகளும் ஆதரித்தன. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே, மருத்துவ கவுன்சிலின் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. நீட் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை திரும்பப்பெறுமாறு மெடிக்கல் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது மத்திய அரசு. எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் தான் அனைவருக்கும் பொதுவான தேர்வை நடத்த முடியும் என்று மருத்துவ கவுன்சில் கூறியதால் நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டது.
ஆட்சிக்கு வந்ததும் ஜூன் 2007 உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்திய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, தாங்கள் ஆட்சியில் இருந்த 2011ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறாமல் பார்த்துக்கொண்டது. 2011ல் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தது. பின்னர், 2013-2014 கல்வி ஆண்டில் நீட் தேர்வு மூலமாகவே மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று 2012 ஏப்ரலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது மெடிக்கல் கவுன்சில். 13 மே 2012ல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா, மஹாராஸ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது மாநில மொழியில் தேர்வு நடத்த வேண்டும் என்று முறையிட்டன. அதற்கு வாய்ப்பு இல்லை தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்று கூறியது மெடிக்கல் கவுன்சில். ஆனால் மாநிலங்கள் விடாப்படியாக இருக்கவே தேர்வை ரத்து செய்தது. ஆனால், 2013 முதல் நீட் தேர்வு நடந்தே தீரும் என்று கூறியது மருத்துவ கவுன்சில். மே 2013ல் தேர்வையும் நடத்தியது. ஆனால், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி “அரசியலமைப்புச் சட்டம் 1949 ஆர்டிகிள் 30ன் படி சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிடமுடியாது ” என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை அல்தமஸ் கபீர், அனில் ஆர்.தவே, விக்ரமஜித் சென் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் அல்தமஸ் கபீர் மற்றும் விக்ரமஜித் சென் ஆகிய இரண்டு நீதிபதிகளும் நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஆனால், நீதிபதி அனில் ஆர்.தவே மட்டும் நீட் தேர்வுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தார். எனினும், பெரும்பான்மை கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு நீட் தேர்வுக்கு தடை விதிக்கப்பட்டது. நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்று காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.
அதன்பிறகு 2014ல் பாஜக ஆட்சியை பிடித்தது முதல் நீட் தேர்வு நடத்துவதற்கான நடைமுறையை தீவிரப்படுத்தியது. அதன் முதல்படியாக 2013ல் உச்சநீதிமன்றம் அறிவித்த தடையாணையை, உச்சநீதிமன்றத்திலேயே உடைத்து தேர்வு நடத்துவதற்கான அனுமதியை 2016ல் பெற்றது. இதற்கு அனுமதியை கொடுத்தது யார் என்றால் 2013 தீர்ப்பில் அல்தமஸ் கபீர், விக்ரமஜித் சென் ஆகியோரது தீர்ப்பில் முரண்பட்டு நீட்டை ஆதரித்தாரே அனில் ஆர்.தவே அந்த தவே தான் மத்திய அரசின் வழக்கை விசாரித்த நீதிபதி. 2013ல் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து நீட் தேர்வுக்கு அனுமதி அளித்துவிட்டார். இதற்கிடையில், ஆரம்பத்தில் நீட் தேர்வை எதிர்த்த குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை தங்கள் மாநிலங்களில் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுவிட்டன. ஆனால், நீட் தேர்வை தமிழ்நாட்டில் நடத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறாது என்று தேர்தல் வாக்குறுதியாகவே அளித்திருந்தார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றிபெற்ற சில நாட்களிலேயே நீட் தேர்வு தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், 2016-2017 கல்வியாண்டுக்கு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்திருந்தார். அதோடு, தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை வெளிப்படையாகவே நடைபெறுகிறது என்றும், வருங்காலத்தில் கூட நீட் தேர்வை தமிழ்நாட்டில் நடத்த முயற்சிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
உடல்நலக்குறைவால் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டில் எல்லாம் தலைகீழானது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றபின் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்த அனுமதிக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் உள்ளிட்ட பலரை சந்தித்தனர். ஆனாலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனாலும், நீட் தேர்வுக்கு எதிராகவே இருப்பதாக இருவரும் கூறிவந்தனர். எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுக்க, நீட் தேர்வுக்கு எதிராக 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அதன் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது எந்த பதிலும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இந்த மசோதா ஏற்கப்படாமல் ஏற்கனவே குடியரசு மாளிகை திருப்பி அனுப்பிவிட்டதாக 2019ல் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து வெளியில் தெரிவிக்காமல் அதிமுக மவுனம் காத்துவந்தது ஏன் என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டுவந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
2021 தேர்தலில் நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி முக்கியப் பங்காற்றியது. அதிமுகவோ தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தது. திமுகவோ தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியாகவே கூறியிருந்தது. ஆட்சியை பிடித்த திமுக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு ஒரு சமூக அநீதி, அது மாணவர்களின் நலனை பாதிக்கும் என்று கூறி சட்டப்பேரவையில் மசோதாவாகவும் நிறைவேற்றியிருக்கிறது.
எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது கொன்டுவரப்பட்டுள்ள மசோதாவிற்கும், ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தான். 2001-2006 காலகட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் போது பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். ஆனால், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எந்த வித வல்லுநர் குழுவின் ஆலோசனையும் இல்லாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட அரசாணை இது என்று கூறி நுழைவுத் தேர்வு ரத்து அறிவிப்பை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் படி சட்டம் இயற்றி தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. அந்த அறிக்கையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதே போன்று நீட் தேர்வுக்கான அறிக்கையையும் நீதிமன்றம் ஏற்கும் என்று நம்புகிறது திமுக.
ஆனால், இதற்கு இடைப்பட்ட 2017 முதல் 2021 வரையிலான காலத்தில் அரியலூரில் அனிதா தொடங்கி, அதே அரியலூரில் கனிமொழி வரை 13 மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான இந்த போரில் அரியலூரிலிருந்து போனதே முதல் உயிரும், கடைசி உயிருமாக இருக்கட்டும்.