பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண் முன்னேற்றம் என்பது வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் அல்ல, சமூக , பொருளாதார, அரசியல் என அனைத்து தளங்களிலும்  அவர்களின் முன்னேற்றத்தினை உறுதி செய்வதே பெண்களுக்கு அதிகாரமளித்தல் எனப் பொருள்படும்.  திராவிட முன்னேற்றக் கழகம் பெண்களுக்கு அரசுப் பணியில் ஏற்கனவே உள்ள 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம்  உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் நேற்று நடைபெற்ற மனிதவள மேலாண்மை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கையின் போது  பொதுப்பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆக உயர்த்தப்படும் என மாண்புமிகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.


சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது இது சமூக நீதி அடிப்படையில் சாதியை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. பின்னர் சிறப்பு இட ஒதுக்கீடு என்பது பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படுவது சிறப்பு இட ஒதுக்கீடு ஆகும். புதிதாக வந்த அறிவிப்பு சாமானியனின் பார்வையில் 100 பணிடங்கள் நிரப்பப் பட்டால் 40 இடங்கள் பெண்களுக்கு என்றும் 60 இடங்கள் ஆண்களுக்கு என்றும் கருதப்படுகிறது. ஆனால் சிக்கல் எங்கே என்றால் சமூக இட ஒதுக்கீட்டையும் , சிறப்பு இட ஒதுக்கீட்டையும் புரிந்து கொண்டால்தான் எந்த அளவுக்கு இந்த இட ஒதுக்கீடு பாலின பாகுபாட்டையும் பெண்கள் முன்னேற்றத்தினையும் உறுதி செய்யும் என்பதை நாம் அறிய முடியும்.   


சமூக இட ஒதுக்கீடு என்பது மொத்தம் உள்ள 100 பணியிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு அதாவது உதாரனமாக பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் படி 26.5 பணியிடங்கள்  பிற்படுத்தப்பட்டோருக்கு என்று நிர்ணயிக்கப்பட்டால் அந்த 100 பணியிடங்களில் 26.5 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தேர்வர்களால் மட்டுமே நிரப்பப் பட்டே ஆகவேண்டும். மேலும் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் திறமையின் காரணமாக  தர வரிசைப் பட்டியலில் முன்னணியில் இருந்தால் பிற்படுத்தப்பட்ட மாணவர் பொதுப் பிரிவுப் போட்டியில் உள்ள காலிப்பணியை தேர்வு செய்ய இயலும். இவ்வாறு பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் பொதுப் பிரிவில் உள்ள பணியிடத்தை நிரப்பினாலும்  26.5 இட ஒதுக்கீட்டில் 1 தேர்வரை பிற்படுத்தப் பட்ட பிரிவில் குறைவாக தேர்வு செய்ய இயலாது. மேலும் பொதுப் பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமல்லாமல் இதர  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தரவரிசையில் முன்னணியில் இருந்தால் பொதுப் பிரிவு இடங்களை எடுத்துக் கொள்ளலாம் இவ்வாறு பொதுப் பிரிவில் எடுத்தாலும் அவர்களுக்கான சமூக  இட ஒதுக்கீட்டின் படி  நிர்ணயிக்கப்பட்ட அளவான , 26.5 , 20 , 18 , 1 என அந்தக் காலிப் பணியிடங்கள் அந்த சமூகப் பிரிவினரைக் கொண்டு நிரப்பட வேண்டும் என்பது சமூக இட ஒதுக்கீடு ஆகும்.  சுருக்கமாகச் சொல்வதானால்  ஒவ்வொர் இட ஒதுக்கீட்டுப் பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவின் படியும் கூடுதலாக பொதுப்பிரிவு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம், பழங்குடியினர் ஆகியோர்  பணிகளை தெரிவு செய்வதற்கு எந்த வித உச்ச வரம்பும் இல்லை ஆனால் சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவின் படி பெண்களுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீட்டின் படி தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் 30 தேர்வர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் இருந்தால்சிறப்பு இட ஒதுக்கீடு நிறைவேறியதாக அர்த்தம் ஆனால் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் 26 பெண்கள் இருந்தால் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் 100க்கு மேல் உள்ள பெண்களை வைத்து 30 இடங்களை நிரப்ப வேண்டும். தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமூக இட ஒதுக்கீட்டைப் போல் சிறப்பு இட ஒதுக்கீட்டையும் பின்பற்றுவதால் பெண்களுக்கான குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டையும் தாண்டி அதிக அளவில் பெண்கள் பணியிடத்தினை நிரப்புகின்றனர்.


சிறப்பு இட ஒதுக்கீடான பெண்கள் இடஒதுக்கீட்டு முறை தொடர்பாக 2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம் எதிரி ராஜேஷ் குமார் தாரியா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி 19 பணியிடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டிருந்தால் தாழ்த்தப் பட்டோருக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 19 பேரை தெரிவு செய்யவேண்டும். அதில் 19 இடங்களுக்குள் 4 பெண்கள் இருந்தால் பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டதாக அர்த்தம் ஆனால் 19 இடங்களுக்குள் 2 பெண்கள் மட்டும் இருந்தால் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் 19க்கு பின் உள்ள பெண் பணியிடங்களை நிரப்ப வேண்டும் இதுவே சிறப்பு இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் முறை ஆகும். 


ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிறப்பு இட ஒதுக்கீட்டையும் , சமூக இட ஒதுக்கீட்டையும் சரிவர புரிந்து கொள்ளாமல், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற குருப் 2 தேர்வில் ஒட்டுமொத்த காலிப்பணியிடங்கள் 1334 அப்போதிருந்த பெண்களுக்கான இட இதுக்கீடு 30 சதவீதம் இதனடிப்படையில் பார்த்தால் 400 பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 400 பெண்களே இந்த இடங்களை நிரப்பி இருக்க வேண்டும். ஆனால் இதில்  767 பெண்கள் இந்த இட ஒதுக்கீட்டினால் பணியைப் பெற்றனர். இதைப் போலவே ஒவ்வொரு தேர்விலும் ஆண் தேர்வர்கள் பாதிக்கபடுகின்றனர். எந்த வித ஆய்வும், தரவுகளும் இல்லாத நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீடு ஆண் தேர்வர்களை கடுமையாக பாதிப்பதுடன் அரசுப் பணியில் பாலின வேறுபாடு ஏற்படக் கூடும்.  சிறப்பு இட ஒதுக்கீட்டையும்  , சமூக இட ஒதுக்கீட்டைப் போல செயல்படுத்தக் கூடாது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரவேற்கபட வேண்டியது. சமூக நீதி என்பது ஏற்கனவே புறக்கணிக்கப்பட்ட பிரிவினரை முன்னேற்றுவதற்காக இருக்க வேண்டுமே தவிர நல்ல நிலையில் இருக்கும் பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒட்டுமொத்த தமிழகத்தில் 49.10  சதவிதம் பெண்கள் உள்ள நிலையில் சட்டப்பேரவையில் வெறும் 12 பெண் உறுப்பினர்களே உள்ளனர்.  உண்மையான பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது அரசியல், வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் என்ற அடிப்படையில் உறுதி செய்வதே ஆகும். எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இந்த இட ஒதுக்கீட்டு சிக்கலை முறையாக ஆராய்ந்து பின்னர் அதன்படி செயல்படுத்த வேண்டும்.