தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 150 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஒப்புதல் அளித்துள்ளது.
மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள்:
இதை தொடர்ந்து, இந்தாண்டு, சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகத்தால் (DGHS) நடத்தப்படும் நீட்-இளங்களை மருத்துவ கலந்தாய்வின் மூன்றாவது சுற்றில் மீனாட்சி கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடங்கள் சேர்க்கப்படுவதாக மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள், இப்போது மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களை தேர்வு செய்யலாம்.
கனவுகளைத் தொடர மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு:
இதுகுறித்து மீனாட்சி மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தங்கள் கனவுகளைத் தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது. இது, அவர்களுக்கு பெருமகிழ்ச்சி தந்துள்ளது.
மருத்துவ உலகம் தொடர் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், திறமையான மற்றும் இரக்கமுள்ள மருத்துவ நிபுணர்களை அர்ப்பணிப்புடன் உருவாக்குவதில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உறுதியாக உள்ளது. இவர்கள், தேசிய அளவிலும் உலக அளவிலும் சுகாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.