கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சைமா எனப்படும் தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் நிறுவனரும், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சருமான ஆர்.கே சண்முகம் செட்டி உருவ சிலையை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் திறந்து வைத்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தினரை சந்தித்து, அவர்கள் வைத்த கோரிக்கைகளை பியூஸ் கோயல் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “தமிழக மக்கள் அனைவரையும் இணைக்கும் வகையில் இளம் தலைவரான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்திவரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை தமிழக மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சில் இடம் பிடித்துள்ளது.
உலக அளவில் தமிழ்நாடு பெருமை அடைய வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் அண்ணாமலை. 'வாசுதேவ குடும்பகம்' எனும் நமது பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகம் ஒரே குடும்பம் என்கிற எண்ணத்தில் இந்தியாவோடு சேர்ந்து தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, ஒரு உலகம் ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்கிற கருத்தை முன்வைத்துள்ளார். துரதிஷ்டவசமாக சில திராவிட கட்சிகள் மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவைகளில் இந்திய மக்களை பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகின்றன. ஆனால், அண்ணாமலை நமது ஒற்றுமையை தமிழகத்தின் எல்லா பகுதிக்கும் எடுத்துச் சென்று வருகிறார்.
தமிழக மக்கள் பாரத பிரதமரோடும் அண்ணாமலையோடும் சேர்ந்து இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழக மக்கள் ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க உறுதுணையாக இருப்பார்கள். ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசை விலக்கி இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழகம் இழந்த முன்னணி இடத்தை மீண்டும் பெற்றிடும். நான் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள ஜவுளி தொழில் துறையினரை சந்தித்து வருகிறேன். சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா ஆகியவை பல்வேறு விலை மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நான் பெருமிதமாக கூறுகிறேன். நமது ஜவுளித்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவை ஜவுளி துறையின் மையமாக உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு இருக்கும்” எனத் தெரிவித்தார்.