Senthil Balaji Arrest: அமலாக்கத்துறையினர் நேற்று தீவிர சோதனை நடத்திய நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட   அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொன்முடி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது அவர் பேசியதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஓரளவிற்கு குணமடைந்து வருகிறார். விரைவில் குணமடைவார் என நம்புகிறேன். நேற்றே முதலமைச்சர் கூறியதைப் போல், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமைச்சர்களையும் அந்த கட்சியினரையும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்கம் போல் இங்கும் மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கெல்லாம் அஞ்சுபவர் அல்ல நமது முதலமைச்சர். எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் திமுக எதிர்கொள்ளும். மிசாவையை நாங்கள் சந்தித்துள்ளோம், இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” என கூறினார். 


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.