முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் சார்பில் ராஜ்பவன் வெளியிட்ட ட்வீட்டில், “மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்.” முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும் காந்தியப் பற்றாளருமான நரேஷ் குப்தா மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். உள்துறை செயலாளர், மாநிலதிட்டக்குழு உறுப்பினர் செயலர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர் நரேஷ் குப்தா. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நரேஷ் குப்தா:
நரேஷ் குப்தா 2005 முதல் 2010-ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 2009 திருமங்கலம் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா சம்பவத்திற்குப் பிறகு, கடுமையான முடிவுகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க..