ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 15வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அனியும் ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுல் பந்து வீச முடிவு செய்தார். 


அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் இன்னிங்ஸை முன்னாள் கேப்டனும் தற்போதைய கேப்டனும் தொடங்கினர். அதாவது, விராட் கோலி மற்றும் டூ ப்ளஸிஸ் தொடங்கினர். இருவரும் முதல் ஓவரில் மட்டும் நிதானமாக ஆடினர். அதன் பின்னர், விராட் கோலி அடித்து ஆட ஆரம்பித்தார். லக்னோ அணியின் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசி வந்தார். அவரை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விழி பிதுங்கி நின்றார் என்றே கூற வேண்டும். லக்னோ அணி எவ்வளவோ முயற்சி செய்தும் விராட் கோலியின் ருத்ரதாண்டவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பெங்களூரு அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்து இருந்தது.  அதிரடியாக ஆடிவந்த விராட் கோலி 44 பந்தில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை அமித் மிஸ்ரா பந்து வீச்சில் பறிகொடுத்தார். பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் களத்திற்கு வந்த மேக்ஸ் வெல் டூ ப்ளஸியுடன் இணைந்து வான வேடிக்கை காட்டினார். இவர்களது பார்ட்னர்ஷிப்பையும் லக்னோ அணியால் பிரிக்க முடியவில்லை. இதனால் பெங்களூரு அணியின் ரன்ரேட் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இறுதியில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 212 ரன்கள் சேர்த்து இருந்தது. லக்னோ அணி சார்பில் அமித் மிஸ்ரா மற்றும் மார்க் வுட் தலா ஒரு விக்கெட் எடுத்து இருந்தனர். இறுதி வரை களத்தில் இருந்த டூ ப்ளஸி 46 பந்தில் 79  ரன்கள் எடுத்து இருந்தார். 


அதன் பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ப்வர்ப்ளேவில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களத்திற்கு வந்த ஸ்டாய்னஸ் சிக்ஸர் மழை பொழியவிட, லக்னோவின் ரன்ரேட் மளமளவென அதிகமானது. 


ஆனால் ஸ்டாய்னஸ் 30 பந்தில் 65 தனது விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் கே.எல். ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் லக்னோ அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், லக்னோ அணி இலக்கை எட்டுமா எனும் கேள்வி இருந்தது. அதன் பின்னர் களத்திற்கு வந்த பூரான் பெங்களூரு பந்து வீச்சை தண்டித்தார். 15 பந்துகளில் அரைசதம் கடந்த பூரான் தனது அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணியை மிரட்டினார். 


ஒருகட்டத்தில் லக்னோ அணிக்கு 24 பந்துகளில் 28 ரன்கள் தேவை என இருந்தது. அதன் பின்னர் அதிரடியாக ஆடி வந்த பூரான் 19 பந்தில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் போட்டியில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டது.  களத்தில் இருந்த லக்னோ அணியின் இம்பேக்ட் ப்ளேயர் பதோனி சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஹிட்-விக்கெட் ஆனார். இறுதி ஓவரில் லக்னோ அணிக்கு வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என இருந்தது. முதல் பந்தில் உனத்கட் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஃபுல்டஸ் பந்தில் மார்க்வுட் க்ளீன் போல்ட் ஆனார்.  அடுத்த பந்தில் இரண்டு ரன் சேர்க்க, நான்காவது பந்தில் ஒரு ரன் லக்னோ அணி சார்பில் எடுக்கப்பட்டது. இதன் மூலம் போட்டி டிரா ஆனாது.  ஐந்தாவது பந்தில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழக்க, ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என இருந்தது. அந்த பந்தில் லக்னோ அணி ஒரு ரன் பைஸ் முறையில் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.