நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். தில்லைகுமார் என்பவரது வீட்டில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


பட்டாசு விபத்தில் தில்லைகுமார், தில்லைகுமார் மனைவி பிரியா, பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியக்காள் இறந்த நிலையில் 20 வீடுகள் சேதமடைந்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


பட்டாசு வெடி விபத்து குறித்து வட்டாச்சியர் ஜானகி, டிஎஸ்பி சுரேஷ், மோகனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


என்ன நடந்தது..? 


நாமக்கல் மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த பட்டாசு கடை உரிமையாளரான தில்லைக்குமார், புத்தாண்டு விற்பனைக்காக சிவகாசியில் இருந்து ஆர்டர் செய்த நாட்டு வெடிகளை கடையில் இடம் இல்லாததால் வீட்டில் உள்ள அறையில் பதுக்கி வைத்துள்ளார். 


இந்தநிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. தொடர்ந்து, வீட்டிலிருந்த 3 சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்து தீ தொடங்கின. 


இதில், தில்லைகுமாரின் வீடு இடிந்து நொருங்கியது. மேலும், அருகிலிருந்த 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் உறங்கி கொண்டிருந்த தில்லைக்குமார், மனைவி பிரியா, தாய் செல்வி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியாக்காள் என்ற மூதாட்டி ஆகிய 4 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். 


இந்தநிலையில், தில்லைகுமாரின் வீட்டில் வேலை பார்க்கும் இளைஞர், தூங்கி கொண்டிருந்தார். பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு எழுந்த இளைஞர், தில்லைக்குமாரின் 5 வயது மகளை தூக்கி கொண்டு உடனடியாக வெளியேறியதால் இருவரும் லேசான தீக்காயங்களுடன் தப்பினர்.