தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் இன்று பிரசாரத்தை தொடங்கி, மக்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், நாகப்பட்டினத்தில் அவர் மேற்கொள்ள உள்ள பிரசாரத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காவல்துறையினர் கூறும் காரணம் என்ன தெரியுமா.?
தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். திருச்சியிலிருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள விஜய், மக்களை சந்தித்து வருகிறார்.
இதற்காக காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார் தவெக தலைவர் விஜய். முன்னதாக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள தவெக சார்பில் அனமதி கேட்டு, மாநகர காவல் ஆணையரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மனு கொடுத்திருந்தார்.
ஆனால், அங்கு அனுமதி தர மறுத்த காவல்துறை, திருச்சி மரக்கடை பகுதியில், எம்ஜிஆர் சிலை அருகே விஜய் பேசுவதற்கு அனுமதி அளித்தனர். ஆனால், அதற்காக 23 நிபந்தனைகளையும் போட்டனர். அதன்படி, இன்று திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விஜய்.
நாகப்பட்டினம் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை
இந்நிலையில், இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய், அதைத் தொடர்ந்து, அடுத்த சுற்றில் நாகப்பட்டினத்திலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, நாகை அவுரித் திடலில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள, காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கேட்டனர்.
ஆனால், தவெகவினர் அனுமதி கேட்ட அதே நாளில், திமுகவினர் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ஏற்கனவே பதிவு செய்துள்ளதால், காவல்துறையினர் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டர்னா, காடாம்பாடி ஐடிஐ வளாகம் போன்ற இடங்களிலும் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று திருச்சி மரக்கடை பகுதியில் தேர்தல் பிரசாரத்தை விஜய் தொடங்கிய நிலையில், மைக் சரியாக வேலை செய்யாததால், அவரது பேச்சை மக்கள் சரியாக கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தவெக தொண்டர்கள் மத்தியில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.