திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதா என்று தவெக விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது மாநிலம் தழுவிய மாவட்ட வாரியான மக்கள் சந்திப்பு பயணத்தை இன்று (செப். 13) தொடங்கி உள்ளார். திருச்சியில் இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணமானது, ஒவ்வொரு சனிக்கிழமையும் திட்டமிடப்பட்டு டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இ

 முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்ற நிலையில், தலைவர் விஜய் திமுக அரசை நோக்கி, அடுக்கடுக்காகப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அவர் கூறும்போது, ‘’அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று சொன்னீர்களே? செய்தீர்களா?

மின்கட்டண கணக்கீடு மாதாமாதம் செய்யப்படும் என்றீர்களே? செய்தீர்களா?

மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றீர்கள், செய்தீர்களா?

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றீர்களே? செய்தீர்களா?

டீசல் விலை குறைப்பு ரூ.3 குறைப்பு என்னும் வாக்குறுதி என்னவானது?

பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு, சொல்லிக் காட்டலாமா?

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீர்களே? செய்தீர்களா?

திருச்சி மக்களின் சப்தம் கேட்கிறதா முதல்வரே?

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?’’ என்று தவெக விஜய் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார். உடனே, ‘’மாட்டோம் மாட்டோம்’’ என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

மைக் சரியாக வேலை செய்யாத காரணத்தால், திருச்சி மரக்கடை மார்க்கெட் பகுதியில் பேச்சை முடித்துக்கொண்டார் தவெக தலைவர் விஜய். . குறிப்பாக சுமார் 30 நிமிடங்கள் மக்களிடையே பேச அவர் திட்டமிட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10 நிமிடங்களுக்கு உள்ளாகவே தனது பேச்சை முடித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து இன்றைய தினத்தில் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் விஜய் பேச உள்ளார்.