தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற  தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாமக மட்டும் உள்கட்சி மோதலில் மிக கடுமையாக சேதம் அடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த அன்புமணி - ராமதாஸ் மோதல் தற்போது உச்சகட்டத்திற்குச் சென்றுள்ளது. 

அன்புமணியை நீக்கிய ராமதாஸ்:

அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பாெறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது பாமக-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்பு ஒரு முறை அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, இந்த கேள்வியை கேட்டதே தப்பு என்று கூறிய ராமதாஸ் தற்போது அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். 

சமாதானப்படுத்திய குடும்பம்:

மேலும், அன்புமணிக்கு தலைமைப் பண்பு அல்ல என்றும், அவர் தனி கட்சி  தொடங்கினாலும் அது வளராது என்றும் கடுமையாக விமர்சித்தார். ராமதாஸ் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக தகவல் வெளியானவுடன், குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் ராமதாஸை தொடர்பு கொண்டு இதை செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

பிரச்சினை பொதுவெளியில் வெடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த ராமதாஸின் பேரன் முகுந்தனே, ராமதாஸை தொடர்பு கொண்டு அன்புமணியை நீக்கினால் தங்களுக்குத்தான் கெட்ட பெயர் வரும், தவறான முடிவு எடுக்காதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும், அவர் முடிவை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் ராமதாஸின் மருமகன் பரசுராமனே நேரில் சென்று ராமதாசிடம் சமரசம் பேசிப்பார்த்தார். ஆனால், ராமதாஸ் தனது முடிவில் இருந்து துளியளவும் மாறவில்லை.

தூண்டிவிடும் முக்கிய நிர்வாகி: 

ராமதாஸின் இந்த முடிவுக்கு பின்னணியில் ஒரு முக்கிய நிர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக-வின் முக்கிய நிர்வாகியான அவர்தான் ராமதாஸிடம் அன்புமணியை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க  வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியதால் இதை செய்தால் மட்டுமே அன்புமணியுடன் வேறு யாரும் கூட்டணி பேசமாட்டார்கள் என்று அந்த முக்கிய நிர்வாகி ராமதாஸிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சிக்கலும், சவாலும்:

அந்த முக்கியப் புள்ளியின் வலியுறுத்தல் எதிரொலியாகவே நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் வெகுண்டழுந்து அன்புமணிக்கு எதிராக பேசினார். மேலும், ராமதாஸிற்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியின் முக்கிய முடிவுகளையும் அவர் எடுக்க காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ராமதாஸ் பல தடாலாடியான அறிவிப்புகளை வெளியிட்டாலும், கட்சி விதிகள் தங்களுக்கே சாதகமாக இருப்பதாக அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமக வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பி ஃபார்மில் கையெழுத்திடும் அதிகாரத்தை தலைவர் என்ற முறையில் அன்புமணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதை எப்படி ராமதாஸ் எதிர்கொள்ளப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சட்ட ரீதியாக பல விஷயங்கள் அன்புமணிக்கு ஆதரவாகவும், பாமக-வின் அடிமட்ட அளவிலும், மூத்த உறுப்பினர்கள் அளவிலும் ராமதாஸிற்கு ஆதரவாகவும் இருப்பதால் இருவரும் பிரிந்து இருப்பது பாமக-விற்கே எதிராக நடக்கும் என்பதே அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் அரசியல் நிபுணர்களின் கணிப்பு ஆகும்.