சித்ரா பௌர்ணமி விழா
" ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளி "
உலகில் எங்கும் காணக் கிடைக்காத உற்சவம்
பெருமாள் இதுபோன்று பூமிக்கு அடியில் உள்ள கிணற்றில் சேர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மலை மீது இருப்பதாக ஐதீகம், அதற்கு ஏற்றார் போல் படி ஏறி சென்று தான், அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும். இந்த உற்சவத்தின் பொழுது மலை மீது இருந்து கீழே இறங்கும் வரதராஜ பெருமாள், பல்வேறு கிராமங்களுக்கு சென்று அருள் பாலிப்பார். அதன் ஒரு பகுதியாக , பாதாள உலகை குறிக்கும் வகையில் பூமிக்கு அடியில் சென்று அருள்பாலிப்பது வழக்கம். மலை மீது இருந்தும் பூமிக்கு அடியில் இருந்தும், தனது பக்தர்களையும், பொது மக்களையும், இந்த உலகையும் பெருமாள் காத்தருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
"நடவாவி கிணறு என்றால் என்ன ? "
நடவாவி என்றால் படிக்கட்டுள்ள கிணறு என்று அர்த்தம். இந்தக் கிணற்றுக்கு செல்ல தரை மட்டத்தில் இருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது. அந்தப் பாதையில் இறங்கிச்சென்றால் கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற நிலையில் தரைமட்டத்தில் இருந்து கீழே செல்ல 48 படிகள் உள்ளன.
இதில் 27 படிகளைக் கடந்தால் அந்த 16 கால் மண்டபத்தை நாம் அடைய முடியும். அங்கிருக்கும் கல் மண்டபத்தில் தான் இந்த உற்சவம் நடைபெறும். பிரசித்தி பெற்ற உற்சவம் என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் இந்த விழாவை பார்ப்பதற்காக நள்ளிரவிலும் கூடுவது வழக்கம்.