சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, சமீபகாலமாக சசிகலா தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வைரலாகி வந்தது. இந்நிலையில், சிறையில் இருந்து வந்தபின் சசிகலா கொடுத்த முதன்முறையாக The week இதழுக்கு பேட்டியளித்துள்ளார். 80-களில் போயஸ் கார்டன் பகுதிக்கு அருகே வினோத் வீடியோ விசன்  ஒளிநாடா கடை தொடங்கியது. முதல், 2016 டிசம்பர் 4-ஆம் தேதி தனது அக்காவின் (ஜெயலலிதாவின்) இறுதி நிமிடங்கள் வரையிலான தனது வாழ்க்கை அனுபவங்களை இதில் பகிர்ந்து கொண்டுள்ளார். 


The Week தளத்தில், மூலக்கட்டுரையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்..


My life with Jayalalithaa: V.K. Sasikala


ஜெயலலிதா எளிமை விரும்பி:         


33 ஆண்டு கால போயஸ் கார்டன் வாழ்கையில்,ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் ஒருபோதும் வெளியே சென்றதில்லை. அக்காவின் அனுமதியின்றி சென்னையில் நான் செல்லும் ஒரே இடமென்றால் அது திநகரில் உள்ள மிலன் ஜோதி ஷோரூம் என்று சொல்லலாம்.  அக்காவுக்கு மிகவும் பிடித்த கார்டன் வரேலி புடவைகளை இங்கு தான் வாங்குவேன். பச்சை, அதுவும் அடர்த்தியான பச்சை அவருக்கு மிகவும் பிடிக்கும். அதிர்ஷ்டமான நிறம் என்றும் உணர்ந்தார். அக்கா, எப்போதுமே, விலையுர்ந்த ஆபரணங்களை தவிர்த்து வந்தார். எளிமையாக இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை கொண்டிருந்தார். 


அக்கா, பெரும்பாலும் புதிய புடவை அணியும் போதெல்லாம், அதே வடிவமைப்பைக் கொண்ட புடவையை நானும் அணிய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார். 2018-ஆம் ஆண்டில் போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது, அலமாரியில் ஒரே வடிவமைப்பில் இருந்த புடவைகளை கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர் என்று சசிகலா தெரிவித்தார். அந்த பச்சை கலர் புடவைகள் அக்காவைப் பற்றிய பழைய நினைவுகளை ஆழப்படுத்துகின்றன. நிலக்கடலையைப் பார்க்கும்போது, ​​நாங்கள் ஒன்றாகக் கழித்த நாட்களை நினைவில் கொள்கிறேன். அக்காவுக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களான வறுத்த பச்சை பட்டாணி, கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை சாப்பிடுவதை  நானும் நிறுத்திவிட்டேன் என்று சசிகலா தெரிவித்தார்.       


ஐந்து நட்சத்திர விடுதிகளில் தயாரிக்கப்படும் கேக் பண்டங்களை விரும்பினாலும், ஆடம்பரமான உணவு வகைகளை விட வீட்டில் சமைத்த உணவையே அதிகம் விரும்புவார்.  என் அன்னியின் (இணை சகோதரி இளவரசி ஜெயராமன்) சமையல் மிகவும் பிடிக்கும் என்று சசிகலா தெரிவித்தார். தனது செல்லப்பிராணிகளை அதிகம் நேசித்தவர் ஜெயலலிதா. தான் வளர்த்த 13 நாய்களில், ஜூலி மிகவும் பிடித்தமான ஒன்று. என்னால், எப்போதும்  மறக்கமுடியாத  சம்பவத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு முறை அக்கா அரசியல் பயணமாக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்து, டெல்லியில் பாஜக தலைவர் எல்.கே. அத்வானியை சந்திப்பதாக இருந்தது. ஆனால், போயஸ் கார்டனில் ஜூலி மரணமடைந்த செய்தியறிந்து, டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக சென்னை திரும்பினார்.  இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, போயஸ் கார்டன் புல்வெளியில் ஜூலியை  அடக்கம் செய்தோம். இதை எப்போதும் நினைத்தாலும் எனக்கு உணர்வுபூர்வமாக இருக்கும் என்று சசிகலா தெரிவித்தார் . 




உறவில் விரிசல்: 


போயஸ் கார்டனில் இருந்து இரண்டு முறை வெளியேற்றப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "என்னை பிரிந்து அக்காவால் ஒரு நிமிடம் கூட  இருக்க முடியாது. வெளியுலக பார்வைக்கு நான் வெளியேற்றப்பட்டேன். ஆனால், அப்போதும் தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். இரண்டாவது முறை வெளியேற்றப்பட்ட போது, நான் தி நகரில் தங்கவைக்கப்பட்டேன். பின்பு, மன்னிப்புக் கடிதம் அளித்ததன் பேரில் மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றேன். இது, இரண்டுமே அக்காவின் யோசனைதான். ஜெயலலிதாவை என்றும் ஒரு தாயாக தான் நினைவில் கொண்டுள்ளேன். என்னை உடன்பிறவா சகோதிரியாக அவர் ஏற்றுக்கொண்டார் என சசிகலா தெரிவித்தார். 


நரேந்திர மோடி உடனான நட்பு:


2015-ஆம் ஆண்டில் அரசு புரட்டோகால் மரபை மீறி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை  பிரதமர் நரேந்திர மோடி வீடு தேடி சந்தித்த சம்பவத்தை நினைவுகூர்ந்த சசிகலா, "இந்த விருந்தை மோடி என்றுமே மறக்க முடியாத வகையில் இருக்க வேண்டும் என்று அக்கா பெரிதும் விரும்பினார். பொதுவாகவே, நரேந்திர மோடியை எப்போதுமே தனது உற்ற நண்பராக ஜெயலலிதா கருதினார்” என்றும் தெரிவித்தார். 98-இல் நடைபெற்ற தேசிய அரசியல் மாற்றங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், " 98-இல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அளித்தவந்த ஆதரவை திரும்ப பெரும் முடிவை தாம் கடுமையாக எதிர்த்ததாக தெரிவித்தார்.   


"சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த முடிவை அறிவித்தார். எனக்கு அப்போது தெரியாது. நான் வேறு நடைபாதை வழியாக விமான நிலையத்துக்குள் சென்று கொண்டிருந்தேன். உண்மையில், டெல்லி சென்று, தொலைக்காட்சியைப் பார்க்கும் தான், முழு விஷயமறிந்தேன். முதலில், என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, மனதளவில் உடைந்து போனேன். முடிவை மாற்றக் கோரி எவ்வளவோ முறை கெஞ்சினேன். சண்டை கூட போட்டேன். எதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை. தனது, முடிவில் உறுதியாக இருந்தார். காஞ்சி சங்கராச்சியார் கைது செய்யப்பட்ட போது கூட, அவரின் முடிகளை என்னால் மாற்ற முடியவில்லை" என்று தெரிவித்தார். 


இறுதி நாட்கள்:  2016, செப்டம்பர் 22 இரவில் நடந்த நிகழ்வுகளை நினைவுக் கூறுகையில் சசிகலாவின் முகம் இருளடைந்ததுபோல் இறுக்கமாகியது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பதிலளித்த அவர், "எல்லாம் நல்லபடியாக போய்க்  கொண்டிருந்தது, அக்காவும் நானும் இயல்பாக பேசிக் கொண்டிருந்தோம். வாஷ் ரூமுக்குச் சென்று வெளியே வந்தவுடன், சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டார். உடனடியாக, அவரை நோக்கி  ஓடினேன். என் மீது மயங்கி விழுந்தார். நான் திகைத்துப் போனேன். ஒரு கையால் அக்காவை ஏந்திக்கொண்டு, தொலைபேசி மூலம் மருத்துவர்களையும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தேன்”என்றார்.   
 
விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் இருந்ததாக கூறும் சசிகலா "மருத்துவமனையில் நன்றாக இருந்தார். மறுநாள் காவிரி நதிநீரி பங்கீடு பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். ஆனால் கடைசியில், எங்கள் பிரார்த்தனைகள் எதுவும் அவரைக் காப்பாற்றவில்லை” என்று கண்ணீருடன் சசிகலா பதிலளித்தார்.  


மேலும், கூறுகையில், " ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். டிசம்பர் 4-ஆம் தேதி மாலை வரை உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.  முழுமையாக குணமடைந்து  டிசம்பர் 19-ஆம் தேதி வீடு திரும்ப முடிவு எடுக்கப்பட்டது.  கொடநாடு சென்று அங்கேயே ஓய்வெடுக்க விரும்புவதாக அக்கா என்னிடம் தெரிவித்தார். ஆனால், போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கியிருந்து பின்னர், கொடநாடு செல்லலாம் என்று நான் தான் அறிவுறுத்தினேன். இவ்வளவு சீக்கிரம், என்னை விட்டு விலகுவார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை” என்று தெரிவித்தார். 
 
டிசம்பர் 4 அன்று, அக்கா தயிர் சாதம் மட்டுமே எடுத்துக்கொண்டார்.  சரியான இடைவெளியில் உணவு அளிக்கப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். மருத்துவமனை சமையலறைக்குச் சென்று இரண்டு பன் மற்றும் பில்டர் காபியை தயார் செய்துகொண்டு வந்து வைத்தேன். தொலைக்காட்சியில் ஜெய் அனுமான் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த அவர், ரிமோட்டை கீழே வைத்து காபியை எடுக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட நான், காபியை எடுத்து அக்காவிடம் கொடுக்க முற்பேட்டேன். என்னிடம் காபியை வாங்குவதற்கு முன்பாகவே, அதிக ஒலியுடன் மூச்சுவாங்கி மயங்கி விழத் தொடங்கினார். நான் கூச்சலிட்டேன். அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவர்கள் ஓடி வந்தனர்.  'அக்கா, அக்கா’ என்று கத்தும்போது, அக்கா கண்களைத் திறந்து உட்கார முற்பட்டார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. விரைவாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினோம் ” என்று தெரிவித்தார்.  


ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி, தனது வீட்டில் ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் எனத் தெரிவித்தார் சசிகலா. அன்றைய நாட்களில், அவர் உட்கொள்ளும் உணவு  இரண்டு பன், ஒரு கப் பில்டர் காபி.


My Life with Jayalalitha - VK sasikala என்னும் தலைப்பில், The Week இதழில் பத்திரிகையாளர் லஷ்மி சுப்ரமணியன் கண்டிருக்கும் நேர்காணலில் தெரியப்படுத்தப்பட்டிருக்கும் தகவல்கள் இவை.