தமிழ் சினிமாவில் தற்போது ஒரு புது பழக்கம் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. அதாவது ஏற்கனவே ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது. குறிப்பாக அண்மையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட வேட்டையாடு விளையாடு திரைப்படம் கமல்ஹாசன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


இந்நிலையில் இன்று நடிகர் ரஜினியின் முத்து திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அதேநேரத்தில் ஆளவந்தான் திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் முத்து படத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் தான் இயக்கிய படங்கள் குறித்து பேசினார். குறிப்பாக ரஜினியுடன் அவர் இணைந்து பணியாற்றிய படங்கள் குறித்தும் கூறினார். அப்போது படையப்பா படத்தில் உள்ள நீலாம்பரி கதாப்பாத்திரத்தை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் உருவாக்கப்பட்டது எனக் கூறினார். 




இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் கருத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் ஆளுமை, அறிவு, ஆற்றல், திறமை எப்படிப்பட்டது என்பதை இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் யோசித்து பார்த்திருக்க வேண்டும். அப்படி அவர் யோசித்து பார்த்திருந்தால் அவர் இந்த கருத்தை கூறியிருக்க மாட்டார்.  அவருக்கு, உண்மையிலேயே தைரியம் இருந்திருந்தால், அவர் தற்போது கூறியுள்ள இந்தக் கருத்தை அம்மா உயிரோட இருக்கும்போது சொல்லி இருக்கவேண்டியதுதானே?  அதைவிட்டுட்டு, அம்மா மறைந்த பின்னர் கூறுவது முற்றிலும் கோழைத்தனம்.


புரட்சித் தலைவி அம்மா உயிருடன் இருக்கும்போது, இப்படிப்பட்ட கருத்தினைச் சொல்லியிருந்தார் என்றால், அதற்கான  எதிர்வினையை  எப்படி இருக்கும் என அவருக்கே தெரியும். இத்தனை நாட்களாக இது தொடர்பாக எதுவும் கூறாமல், தற்போது வந்து கூறுவது முற்றிலும் கோழைத்தனம்.  இதனை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளனர்.  முத்து திரைப்படம் திரும்பவும் ரிலீஸ் செய்வதால், படம் ஓடவேண்டும் என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இவ்வாறு கூறியுள்ளார் என நினைக்கின்றேன். தனது படத்திற்கு விளம்பரம் தேவை என்றால் அவர் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும் அதற்காக புரட்சித் தலைவி அம்மா குறித்து பேசியதை கண்டிக்கின்றேன். புரட்சித் தலைவி அம்மாவோ, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோ அல்லது மறைந்த தலைவர்கள் யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும். மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது நாகரீகம் இல்லை, காட்டுமிராண்டித்தனம்.




இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின், இந்தப் பேச்சை நடிகர் ரஜினிகாந்த் இந்நேரம் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் ரஜினிகாந்த் இதுவரை கண்டித்ததைப்போல் தெரியவில்லை.  கே.எஸ் ரவிக்குமாருக்கு என்னோட கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.