கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடித்த விஜயின் தந்தையை காவல் துறையினர் விசாரணையின் போது அடித்து, துன்புறுத்தியதால், மனம் உடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரது மனைவி புகார் கூறியுள்ளார்.

 

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த தேவரெட்டியூர் பகுதியை சேர்ந்த, முனிரத்தினம் (50) என்பவர், கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் விஜய் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில்,  நகைகளை கொள்ளை அடித்தது சம்பந்தமாக கோயமுத்தூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி கொள்ளையன் விஜய் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். அப்போது விஜய் தனது வீட்டின் குளியலறையில் 2 செல்போன்கள், 38 கிராம் நகையை வைத்துள்ளார். இதனையறிந்த தந்தை முனிரத்தினம், நகை மற்றும் செல்போன்களை, வீட்டில் இருந்ததாக கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ந் தேதி இரவு கோயம்புத்தூர் காவல் துறையினர் தேவரெட்டியூரில் உள்ள வீட்டிற்கு வந்து விஜயின் தந்தை முனிரத்தினத்தை அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.



 

இதனைத் தொடர்ந்து கோவை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வந்த பின்பு அவரை நேற்று மாலை விடுவித்தனர். மேலும் முனிரத்தினத்திடம் குற்றவாளி விஜயை ஒப்படைக்குமாறு எச்சரித்து உள்ளனர். கோவை காவல் துறையினர் முனிரத்தினத்தை, விசாரணைக்கு அழைத்து சென்ற போது, தேவரெட்டியூர் கிராமத்திலேயே, கிராம மக்கள் மத்தியில் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடத்தும் போது கடுமையாக தாக்கி, துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து காலை வரும்பொழுது விஜய் இருக்கும் இடத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், வீட்டில் உள்ள அனைவரையும் பிடித்து செல்வோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. 

 

இதில் மனமுடைந்த முனிரத்தினம் நேற்று இரவு வீட்டின் மேற்குறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மாரம்மாள் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது சொந்த ஊரான தேவரெட்டியூரில் உடல் தகனம் செய்யப்பட்டது. 



 

ஆனால், விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரிலேயே இருசக்கர வாகனங்களை திருடியதால் கிராம மக்கள் மத்தியில் அவ பேருக்கு ஆளான பெற்றோர் தங்களது வீட்டிற்கு வர வேண்டாம் என தெரிவித்து இருசக்கர வாகனங்களை திருடியதற்காக பெற்றோரே காவல் நிலையத்தில் இசையை ஒப்படைத்துள்ளனர். அன்றிலிருந்து விஜய் வீட்டிற்கு வந்து 9 மாதங்கள் ஆகிறது. விஜய் தாத்தா இறந்த துக்க நிகழ்வு கூட வரவில்லை. ஆனால் கோவையில் நகை கொள்ளை அடித்த பிறகு, கடந்த இருதினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது வந்து,  வீட்டில் செல்போன் மற்றும் நகைகளை வைத்து விட்டு சென்றதாகவும், அதையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டோம். ஆனால் எந்த தவறும் செய்யாத எங்களை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் கடுமையாக தாக்கி விட்டதாகவும், தனது கணவரை கோயமுத்தூர் குற்றபிரிவு காவல் துறையினர் ஊர் பொது மக்கள் முன்பு கடுமையாக தாக்கியதாகவும், விசாரணை என்ற பெயரில் அழைத்து செய்து தனிமைபடுத்தி தாக்கியதாகவும், தனது கணவர் தன்னிடம் தெரிவித்தார்.

 

மேலும் இந்த மன உளைச்சல் தாங்காமல், வீட்டிற்கு வந்ததிலிருந்து, காவல் துறையினர் அடித்து துன்புறுத்தினர், நாளை மீண்டும் வருவதாக தெரிவித்துள்ளார்கள். நான் ஏன் உயிரோடு இருக்கனும் என சொல்லிக் கொண்டே இருந்ததாகவும்,  வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கண்ணீர் மழ்க தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஜயின் தந்தை முனிரத்தினத்தின் உடலை காண மகன் வரக்கூடும் என்பதால் காவல் துறையினர் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.