திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி மாலை சுடுகாட்டு பாதை இல்லாத காரணத்தினால் பொது வழியில் எடுத்து செல்லப்பட்ட சடலத்தால்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களின் வீடுகளின் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கடலாடி காவல்நிலைய காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்து ஆதிக்க ஜாதியைச் சார்ந்த 21 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் 250க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பார்வையிடவும், தாழ்த்தப்பட்ட மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்தவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை ஆணையர் அருண் ஹால்டர் சம்பவ இடத்தில் ஆதிக்க சமூகத்தை சாந்தவர்களால்  சேதப்படுத்திய வாகனங்கள் மற்றும் வீடுகளை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவகத்தில் பாதிக்கப்பட்ட 81 நபர்களிடம் தனி அறையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை ஆணையர் தனிதனியாக விசாரணை மேற்கொண்டு மனுக்களை பெற்றார். மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை 2 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடைப்பெற்றது. 




தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை ஆணையர் அருண் ஹால்டர் செய்தியாளர்களை சந்திக்கையில், 21 நூற்றாண்டில் சடலங்களை கொண்டு செல்ல இரு சாலை முறை என்பது ஏற்க முடியவில்லை. இதற்கான காரணம் என்ன ஏன் இவ்வாறு செய்தார்கள் என அரசு அதிகாரிகளுடன் பேசி இதுகுறித்து ஆலோசனைகளை வழங்கி உள்ளோம். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 307 கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும், ஒரு சிலர் கைது செய்யப்படாமல் உள்ளனர் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும்  கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கலவரம் நடைப்பெற்ற  5 நாட்களுக்குள் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், கலவரத்தால் பாதிக்கப்பட்டு விடுபட்ட நபர்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும், என தெரிவித்தார். மயானத்திற்கு இரண்டு வழிகளில் சடலங்களை எடுத்து செல்லும் முறையை ரத்து செய்து ஒரே வழியில் அனைத்து தரப்பினரின் சடலங்களும் செல்ல 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று  மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். 



இதில் தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் செந்தாமரை கண்ணன் (சட்ட ஒழுங்கு), வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் சந்தோஷ் குமார், காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்,காவல்துறை கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் கண்ணா, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.