கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை அப்பகுதியின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் 16 கடைகளுடன் உழவர் சந்தையை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கவுன்சிலர்களுக்கும், பொதுமக்களுக்கும் முருங்கை சூப் தயாரித்து வழங்கிய சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது.


 


 




கரூர் தெற்கு காந்திகிராமம் பூங்கா சாலையில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய உழவர் சந்தையினை கரூர் மாநகராட்சி மேயர்  கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா ஆகியோர் திறந்து வைத்தார்கள். விவசாயிகளின் நலனுக்காக முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உன்னதமான திட்டம்தான் உழவர் சந்தை விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் இடைத்தரகர்கள் இன்றி சரியான விலையில் நுகர்வோர்களுக்கு சென்றடைவது இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டும் செயல்பாட்டில் உள்ள உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


 




 


கரூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கட்டுப்பாட்டில் 5 உழவர் சந்தைகள் கரூர், குளித்தலை, வேலாயுதம்பாளையம், பள்ளப்பட்டி மற்றும் வெங்கமேடு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சந்தைகளின் மூலம் தினசரி சராசரியாக 46 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி சராசரியாக 250 விவசாயிகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாநகராட்சி தெற்கு காந்திகிராமம் பகுதியில் புதிய உழவர் சந்தை திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உழவர் சந்தையினை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உழவர் சந்தையில் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பாட்டிற்காக 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு இலவச மின்னணு எடை தராசு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள்
செய்யப்பட்டுள்ளது.


 




 


இச்சந்தையின் மூலம் கரூர் தாந்தோணி மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டார விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவார்கள். புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள உழவர் சந்தை மூலமாக விவசாயிகள் இடைத்தரகர்களின் இடையூறு இன்றி நேரடியாக விலை பொருட்களை நுகர்வோர்களுக்கு பசுமையான மற்றும் தரமான காய்கறிகள் சரியான விலையில் கிடைக்கும் எனவே வேளாண் பெருமக்கள் மற்றும் நுகர்வோர்கள் அனைவரும் புதிய உழவர் சந்தையினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சரவணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர்  முகமது பைசல், வேளாண்மை இணை இயக்குனர்கள்  ரவிச்சந்திரன், திருநாசர்(வேளாண் வணிகம்), உதவி இயக்குனர்கள் காதர் மைதீன், கவிதா, மண்டல குழு தலைவர் ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் சூரியகலா, சரஸ்வதி, உழவர் மன்ற அமைப்பாளர்கள் நல்லுசாமி, தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.