தேர்தல் நெருங்கும் நிலையில், 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிபி சிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐஜி-ஆக பதவி வகித்து வந்த தேன்மொழி ஐ.பி.எஸ்., காவல்துறை பயிற்சி கல்லூரி கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 


13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:


சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக வி. அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை துணை ஆணையர் பி.பாலாஜி, காவலர் நலத்துறை ஏ.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக எஸ். வனிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக டி. ரமேஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே. ஆதிவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராக எஸ்.எஸ். மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதோடு, தமிழ்நாடு காவல்துறையில் 5 ஏ.எஸ்.பி.க்கள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாடு அரசு அதிரடி:


காரைக்குடி எஸ்.பி. ஸ்டாலினுக்கு கோவை நகர வடக்கு பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரிக்கு, மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ்க்கு, திருப்பூர் நகர சட்டம்  ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக விவேகானந்தா சுக்லாவுக்கு பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது.


சமீப காலமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், கடந்தாண்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தொழில்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஆனந்த் குமார் ஐஏஎஸ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.     


இதையும் படிக்க: Morning Headlines: சிஏஏ சட்டம் அமல்: மத்திய அரசை எதிர்க்கும் விஜய்; குஷ்புவின் சர்ச்சை பேச்சு: முக்கியச் செய்திகள்..