தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி. இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.
இதன் காரணமாகத்தான், கழக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.
இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின்:
முன்னதாக நேற்று சிஏஏ சட்டம் அமல் என்று அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் Citizenship Amendment Act-ஐ இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை அறிவாலயம் உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம். இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!” என தெரிவித்திருந்தார்.