மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற வேண்டும் என கர்நாடக முன்னாள் பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். 

Continues below advertisement

பசவராஜ் பொம்மை சொன்னது என்ன?

 கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளது. இதற்கு  தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார். இப்படியான நிலையில் கர்நாடகா பாஜக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

அதில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தை  திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அங்கு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி அதனை விலக்கி கொள்ள வேண்டும். இதனை கர்நாடக முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமார் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

மாணிக்கம் தாகூர் கொடுத்த பதிலடி

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் கருத்து ஆச்சரியமளிக்கிறது. மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்கும் விவகாரத்தில் பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் நின்றன.

பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அவையில் கலந்து கொண்டு அந்த ஒருமித்த குரலுக்கு ஆதரவளித்தார். தமிழ்நாடு மேகதாது திட்டத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று  பொம்மை கருதினால், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்த தனது சொந்த கட்சியின் எம்.எல்.ஏ.வை பாஜகவிலிருந்து நீக்குமாறு அவர் கோருவாரா? அதிலும் வேடிக்கையானது, கர்நாடக முதலமைச்சரின் பதவியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கூறுவது. விசித்திரமான கோரிக்கை, பொம்மை ஜி!

Also Read: நடிகையோடு ஜாலியாக இருந்தவர்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு காங்கிரஸ் எது தமிழ்நாட்டின் நலனுக்கானது என்பதைத் தானே முடிவு செய்யும். தமிழ்நாடு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை கர்நாடக முதலமைச்சருக்கு நாங்கள் கொடுக்கவில்லை. ஒருவேளை பாஜகவில் ஒரு மாநிலத் தலைமை மற்றொரு மாநில பாஜக பிரிவுக்கு உத்தரவிடலாம். காங்கிரஸ் அப்படி செயல்படுவதில்லை. நிலம், நீர், மொழி போன்ற விவகாரங்களில் கர்நாடகம் எப்படி ஒன்றுபட்டு பேசுகிறதோ, அதேபோல் காவிரி நீர் உரிமையை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடும் ஒரே குரலில் நிற்கிறது.

இங்கு கட்சி அரசியலுக்கு இடமில்லை; மக்களின் உரிமையே முதன்மை. தமிழ்நாடு காங்கிரஸ் அரசியல் விவகாரகுழு தமிழ்நாட்டின் நலனுக்காகவே தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது. அந்த முடிவில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இந்த அரசுக்கு எங்களின் ஆதரவு தொடரும். எதிர்காலத்திலும் காங்கிரஸ்– தவெக கூட்டணி தொடரும் . இது கட்சி அரசியல் பற்றியது அல்ல. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பது பற்றியது” என தெரிவித்துள்ளார்.