திமுகவில் இருந்து பிரிந்த பங்காளிகள் தான் அதிமுக என்றும், இவ்விரு கட்சிகளும்  இணைவதில் எந்த தவறும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சைகளையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

Continues below advertisement

கொளுத்திப் போட்ட சண்முகம்

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியமைத்த நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் படுதோல்வியடைந்தது. இதனிடையே தவெகவை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. இதற்கு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் உடன்படவில்லை என்றும், அவர்கள் தவெகவுக்கு ஆதரவு முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது. 

இதனை கூட்டணி கட்சி தலைவர்கள் மறுக்கவும் இல்லை. இவ்வளவு ஏன் திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் கூட மறுப்பேதும் தெரிவிக்காமல் பட்டும் படாமல் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுக்க தவெகவுக்கு ஆதரவு அளித்தோம் என கூற சர்ச்சை வெடித்தது. 

Continues below advertisement

கூட்டணி அமைத்தால் என்ன தப்பு?

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பல விஷயங்களை வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார். அதாவது, “சிபிஐ மற்றும் சிபிஎம் ஒரே அரசியல் பாதையில் பயணிக்க முடியுமென்றால் அதிமுக மற்றும் திமுகவால் ஏன் முடியாது என நினைக்கிறீர்கள். அதிமுக எங்களைப் போன்ற ஒரு திராவிடக் கட்சி தான். எங்கள் இருவரின் சிந்தாந்த எதிரி பாஜக தான். அதற்காக நாங்கள் இப்போது இணைய வேண்டும் என்று அர்த்தமல்ல, ஆனால் அது ஒரு குற்றமும் இல்லை.

அதிமுக எங்கள் பங்காளி போன்றவர்கள் தான். வரலாற்று ரீதியாக எதிரெதிராக சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த திமுக, அதிமுகவை காலம் ஒரே பக்கமாக ஒன்றிணைத்துள்ளது. இத்தகைய சூழல் அமைய தமிழக வெற்றிக் கழகம் தான் காரணம். 

Also Read: TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!

அதிமுக திமுகவில் இருந்து பிரிந்த கட்சி தான். அது ஒன்று தீண்டத்தகாத கட்சி கிடையாது. கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மாநிலங்களவை இடங்களைக் கூட பெற்றுள்ளது. தவெகவின் கூட்டணி கட்சிகளை கணக்கில் கொண்டால் அவர்கள் அடுத்த தேர்தலில் இதே கூட்டணியில் நீடிப்பார்களா என்பது கூட உறுதியாகவில்லை. 

அரசியல் பலத்தில் பலவீனமடைந்தவர்கள் இப்போது தங்களது கூட்டணிகளை மாற்றிக்கொள்கிறார்கள். மக்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள். திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி விலகிய நிலையில் அடுத்து மதிமுக விலகுவதை ஆர்.எஸ்.பாரதி மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். மேலும் திமுகவுக்கு என சொந்த பலம் உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில்  இருந்த கூட்டணி அடுத்தடுத்து நடந்த ஐந்து தேர்தல்களிலும் அப்படியே நீடித்தது. தற்போதும் கூட்டணி கட்சிகள் தான் விலகி செல்லும் முடிவை எடுத்துள்ளது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.