விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் 1400க்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


விழுப்புரம் போக்குவரத்து கழகம்:


விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மண்டலங்களில் 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மண்டலத்தில் மட்டும் 730 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளை முறையாக இயக்கவோ, அதனை பராமரிக்கவோ போதிய அளவில் ஊழியர்கள் இல்லாமல் விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திணறி வருகிறது.


மக்கள் அதிகமாக அரசு  போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். வெளியூர் செல்ல மற்றும் அதிக தூர பயணங்களுக்கு அரசு பேருந்தையே விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி  மேலும் முக்கிய விழா நாட்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் அரசு பேருந்தில் அரசு நிர்ணய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் ஆட்கள் பற்றாகுறை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.


பணியாளர்கள் பற்றாக்குறை:


பொதுவாக ஒரு அரசு பேருந்தை இயக்க ஓட்டுநர், நடத்துநர், டெக்னீசியன், சூப்பர்வைசர் என 7.7 ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பது சட்ட விதியாக இருந்து வரும் சூழ்நிலையில் தற்போது ஒரு பேருந்திற்கு 5.7 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். அதன்படி பார்த்தால் விழுப்புரம் மண்டலத்தில் மட்டுமே இதுவரை ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப அலுவலர், சூப்பர்வைசர் என 1460 ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருபவர்களில் 47 பேர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றனர். இதில் 19 ஓட்டுநர்கள், 11 நடத்துநர்கள், 7 தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் 10 பேர் என மொத்தமாக 47 பேர் இன்றுடன் ஒய்வு பெறுகின்றனர். ஏற்கனவே ஊழியர்களின் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வரும் விழுப்புரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தற்போது மேலும் 47 பேர் ஓய்வு பெறுவதால் பேருந்துகளை சரிவர இயக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 


பயணிகள் அவதி:


அரசு போக்குவரத்து கழகத்தில் நிலவி வரும் ஊழியர்களின் பற்றாக்குறையால் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவத்து துறையில் நிலவி வரும் ஊழியர்களின் பற்றாக்குறைகளை போக்க அரசு நடவடிக்கை எடுக்காமல் பணியில் உள்ள ஓட்டுநர், நடத்துநர்களையே தொடர்ந்து பணி செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாள் பேருந்தை இயக்கினால் ஒரு நாள் ஓய்வு என்கிற நிலை மாறி ஓய்வின்றி நாள் தோறும் பேருந்துகளை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.


இதனால் ஓய்வு இல்லாமல் ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கி வருவதால் அடிக்கடி அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவதையும் நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம். அரசு போக்குவரத்து துறையில் நிலவி வரும் ஊழியர் பற்றாக்குறைகளை போக்க படித்த வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கும் இளைஞர்களைக் கொண்டு ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி பொதுமக்களின் அத்தியவாசிய தேவைகளில் ஒன்றான பேருந்து போக்குவரத்தை சீர் செய்ய அரசு முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. மேலும் ஆட்கள் பற்றாகுறை என்பது விழுப்புரம் போக்கு கழகம் மட்டுமின்றி அனைத்து அரசு போக்குவரத்து கழகத்திலும் ஆட்கள் பற்றாகுறை உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் இது தொடர்பாக சிஐடியூ தலைவர் மூர்த்தி கூறியதாவது:-


விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் ஆட்கள் பற்றாகுறை அதிக அளவில் உள்ளது, ஆட்கள் பற்றாகுறை நிரப்பாமல் தற்போது உள்ள ஊழியர்களை பணிச்சுமை அளிக்கப்படுகிறது. சுமார் 1500 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து மிகப்பெரிய சிக்கலில் சிக்க உள்ளது, இதற்கு போக்கு துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் காலிப்பணியிடங்கள் நிரப்பா விட்டால் போராட்டம் நடத்த போவதாக கூறினார்.