தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 18 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வைத்த நிலையில், திடீரென கடந்த இரண்டு தினங்களாக மழை கொட்டி வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
17 மாவட்டங்களில் மழை
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பில், ‘ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல்’ ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்’ ஆகிய மாவட்டங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை வெளியான அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.
அதேசமயம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.