காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல்காந்தியின் 53வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடினர்.
குஷ்புவிற்கு கோபம் வராதது ஏன்?
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது“ சென்னை, சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகே 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையான களப்பணி ஆற்றுவது என உறுதிமொழி எடுத்துள்ளோம். அனைத்து மனிதர்களும், அனைத்து கலாசாரங்களும், அனைத்து மதங்களும் சமம் என்று சொல்லும் உயரிய நோக்கத்துக்காக ராகுல் காந்தி பணியாற்றுகிறார். அவரது பாதையை பின்பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் செயல்படும்.
பா.ஜ.க.வில் இருக்கும் குஷ்பு தன்னை ஒருவர் தரக்குறைவாக பேசியதற்காக வருத்தத்தை தெரிவித்துள்ளார். அந்த செய்தி வெளியான உடனேயே தி.மு.க. அந்த நபரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறது. அதற்காக தி.மு.க.வை பாராட்டுகிறேன். குஷ்புவுக்கு வந்த கோபத்தையும் மெச்சுகிறேன். ஆனால் இந்த கோபம், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங், விளையாட்டு வீராங்கனைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டபோது ஏன் அவருக்கு வரவில்லை?
சவப்பெட்டியின் கடைசி ஆணி:
பாட்னாவில் வருகிற 23-ந் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாடு ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் தத்துவங்களின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக இருக்கும். மத்திய அமைச்சரவையில் குற்றம் சாட்டப்பட்ட 33 மந்திரிகள் பதவியில் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு சட்டம், செந்தில் பாலாஜிக்கு ஒரு சட்டமா?”
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.வின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பற்றி அவதூறாக பேசியிருந்தார். இதையடுத்து, குஷ்பு அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். மல்யுத்த வீராங்கனைளுக்கு பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷன்சிங் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச அளவில் இந்தியாவிற்காக பதக்கம் வாங்கிய மல்யுத்த வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் நடிகை குஷ்பு மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பேசாதது ஏன்? என்று அவருக்கு நிகழ்ந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: கலைஞர் கோட்டம் திறப்பு விழா: சென்னை வர இருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் வருகை ரத்து.. காரணம் என்ன?
மேலும் படிக்க: TN Rain Alert: கொட்டித்தீர்த்த மழை... சென்னையில் ஜூன் மாத மழை 295 சதவீதம் அதிகம்: வானிலை அப்டேட்