சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அருள் இராமதாஸ் பணியிலிருந்த பெண் காவல் ஆய்வாளரை செல்போனில் மிரட்டும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளராக பணியில் இருப்பவர் சந்திரகலா. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர் சந்திரகலாவிற்கு செல்போனில் தொடர்பு கொண்ட சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ அருள் இராமதாஸ், ஆய்வாளரிடம் தாங்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரை மதிப்பதில்லை என்று பேசத் தொடங்குகிறார். தொடர்ந்து , சட்டமன்ற உறுப்பினர் அருள் இராமதாஸ் பெண் காவல் ஆய்வாளரிடம் தன்னை ஒருமையில் பேசியதாகவும்,  பல்வேறு இடங்களில் ரூபாய் 50,000 ஒரு லட்சம் என கையூட்டு பெற்றுக்கொண்டு பணி செய்து வருவதாக சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நான் உங்கள் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக பெண் காவல் ஆய்வாளரை மிரட்டி உள்ளார்.



இதற்கு பெண் காவல் ஆய்வாளர் சந்திரகலா தங்களை இதுவரை ஒரு முறை கூட ஒருமையில் பேசவில்லை என்றும் எங்கேயாவது கையூட்டு பெற்றிருந்தால் சொல்லுங்கள் என்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணி செய்து கொண்டிருக்கும் என்னை மிரட்டும் தொனியில் பேசுவது நியாயமில்லை என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பெண் காவல் ஆய்வாளர் சொல்வதைக் கேட்காமல் அவர் தனது குரலை உயர்த்தி சட்டமன்ற உறுப்பினர் பதவியை மனதில் வைத்து கொண்டு மிரட்டும்  தோரணையில் பேசியதால் காவல் ஆய்வாளர் தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.


இது தொடர்பாக, பெண் காவல் ஆய்வாளர் சந்திரகலா,  சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் இராமதாஸ் மீது  புகார் கொடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் காவல் ஆய்வாளரை மிரட்டும் தொனியில் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வயதான தம்பதி ஒருவரின் நிலத்தை பாமகவினர் வற்புறுத்தி விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும், இது தொடர்பான  புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சந்திரகலா பாமகவினரை எச்சரித்ததன் தொடர்ச்சியாக எம்எல்ஏ காவல் ஆய்வாளரை மிரட்டியதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.



கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தன்னை சட்டசபையில் இருக்கும்போது, லஞ்சம் வாங்குவதை நிறுத்த சொன்னதற்கு, சேலம் இரும்பாலை காவல் ஆய்வாளர் சந்திரலேகா ஒருமையில் 'எம்எல்ஏ என்றாலும் மந்திரி என்றாலும் என்னை ஒண்ணும் புடுங்க முடியாது' என்று கூறியதாகவும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், டிஜிபிக்கு புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸிடம் கேட்டபோது, "காவல் ஆய்வாளர் சந்திரலேகா அவர் ஒருமையில் பேசியதை தவிர்த்துவிட்டு நான் பேசியதை மட்டும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்" என்று கூறினார்.