நேற்று முதல் ”ஸ்டாலின் தான் வராரு” என்ற பாடல்தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங். திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை திமுக மட்டுமே பெற்றிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. மாபெரும் வெற்றியை பதிவுசெய்துள்ள திமுக ஆறாவது முறையாக ஆட்சியில் அமர இருக்கிறது. ஆனால் வெற்றிக்கொண்டாட்டத்தின் நடுவே ஆட்சியை தொடங்கும் வழக்கமான நாட்களாக இந்த முறை இல்லை. காரணம் கொரோனா. கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிய முறையில் பதவியேற்பு விழா நடத்தப்படுமென ஸ்டாலினும் தெரிவித்துள்ளார். அதேபோல் மிகவும் சவாலான ஒரு நிலையிலேயே ஆட்சியில் பொறுப்பேற்கவுள்ளார் ஸ்டாலின். அதிகரிக்கும் கொரோனா, பெருந்தொற்றுக்கு நிதி பெறுதல் என ஸ்டாலினின் எதிரே பல சவால்கள் உள்ளன. 




இந்த நிலையில் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு ட்விட்டரிலும், நேரிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ட்விட்டரில் தனக்கு வரும் வாழ்த்துகளுக்கு பதிலாக நன்றி என்ற வழக்கமான பதிலை ஸ்டாலின் சொல்லவில்லை. நேற்று முதல் ஸ்டாலினின் ட்வீட்கள் அதிகம் கவனம் பெறுகின்றன. ஸ்டாலினின் ட்வீட்கள் சொல்லவருவது என்னவென்றால் நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவோம் என்பதாகவே உள்ளது. ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என அரசியல் முதிர்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார். 






அதேபோல ப.சிதம்பரத்தின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த அவர், தங்களின் ஆலோசனைகள் எங்களை வழிநடத்தும் என குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் வாழ்த்துக்கும், பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப்பணிக்கு துணையாகட்டும் என தெரிவித்துள்ளார். அதாவது தமிழக அரசியல் கட்சியினரிடம் இருந்து வாழ்த்துகளுக்கு நன்றியுடன் சேர்த்து அவர்களின் ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு வருகிறார். கட்சி சார்பற்றவர்களின் வாழ்த்துகளுக்கு நிச்சயம் தமிழகம் மீளும் என்ற வாக்குறுதியை நன்றியாக தெரிவித்து வருகிறார்.






இது ஒருபுறம் இருக்க மத்தியில் இருந்து வரும் வாழ்த்துகளை யூனியன் அரசு என்ற வார்த்தைகளால் கையாள்கிறார் ஸ்டாலின். அதாவது Central Government என்பது மத்திய அரசு எனப்பொருள்படும். Union government என்பது ஒன்றிய அரசு என பொருள்படும். மாநிலங்களால் ஆன ஒன்றிணைந்த அரசு என்பதை மறைமுகவே அழுத்திச்சொல்கிறார் ஸ்டாலின் என்பதே சோஷியல் மீடியா ஹாட் டாக்.






மக்களின் நலனுக்காக மாநில அரசுகள் மத்திய அரசுடன் தோளோடு தோள் கொண்டு செயல்படும் என்று நான் நம்புகிறேன் என வாழ்த்து தெரிவித்த அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், எங்கள் கூட்டாட்சி கடமைகளை நிறைவேற்றவும், அதன் மக்களின் நலன்களை முன்னேற்றவும் தமிழகம் ஒன்றிணைந்த அரசுடன் நிற்கும் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பிரதமர் மோடியின் வாழ்த்துக்கும் மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற யூனியன் அரசுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்றே பதிவிட்டுள்ளார்.  இப்படியாக மத்தியில் இருந்துவரும் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் பயன்படுத்தும் வார்த்தைகள், உள்ளூர் அரசியல் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்கும் கையோடு மாநில வளர்ச்சிக்கு ஆதரவுகோரும் முறை என ஸ்டாலின் ட்வீட்கள் அதிகம் கவனம்பெற்று வருகின்றன.