தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலமான போட்டியாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் இரு பெரும் கட்சிகளான திமுக - அதிமுக ஆகிய கட்சியுடன் இந்த முறை திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், மறுபக்கம் சவால் அளிக்கும் என்று கருதப்படும் நாம் தமிழர் ஆகியோர் இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். 

உட்கட்சி பூசலில் திமுக:

அதிமுக, நாம் தமிழர், தவெக என பலத்த போட்டி திமுக-விற்கு இருக்கும் சூழலில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க திமுக மிகத்தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிகளவு பூத் கமிட்டி உள்ள கட்சியாக திமுக இருந்தாலும் அதிகளவு உள்கட்சி பூசல், மோதல் உள்ள கட்சியாகவும் திமுக உள்ளது. இதுவே திமுக-விற்கு பல இடங்களில் பின்னடைவையும் உண்டாக்கியுள்ளது.

தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் திமுக இருந்தாலும், தற்போது திமுக கைவசம் உள்ள சில தொகுதிகளில் வாக்குகள் சரிவதற்கும், தொகுதியை கோட்டை விடுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் திமுக தலைமைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

மு.க.ஸ்டாலின் முடிவு:

இதனால், தங்கள் வசம் உள்ள தொகுதிகளை தங்கள் கைகளில் தக்கவைக்கவும், கடந்த முறை தோல்வியடைந்த தொகுதிகளில் வெற்றி பெறவும் தீவிரமாக நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருகிறது. ஆனால், திமுக வெற்றி பெற உள்கட்சி பூசல் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. 

இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய முடிவை கையில் எடுத்துள்ளார். அதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை குவிக்கும் நிர்வாகிகளுக்கு பரிசுகளை அள்ளிக்கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார். 

என்னென்ன பரிசு?

அதாவது, அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சித் தேர்தல் முதல் பெரிய தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளார். இதன்மூலம் கட்சியில் நிலவும் உள்கட்சி பூசலும், மோதலும் குறைந்து வெற்றி அதிகரிக்கும் என்று அவர் வியூகம் வகுத்துள்ளார். 

மு.க.ஸ்டாலினின் இந்த வியூகம் தேர்தலில் கை கொடுக்குமா? திமுக-வின் உட்கட்சி மோதலே தேர்தலில் அவர்களுக்கு எதிராக மாறுமா? என்பதற்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகளே பதில் தரும். பல மாவட்டங்களில் அமைச்சர்கள் பொறுப்பு வகிக்கும் மாவட்டச் செயலாளர்கள் மத்தியிலே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. 

பலத்த போட்டி:

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் சுற்றுப்பயணத்தை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கிவிட்டார். அவர் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். மறுமுனையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 

மற்றொரு புறம், தமிழக வெற்றிக் கழகம் இணையதளத்தில் தொடர்ந்து திமுக-விற்கு எதிராக தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்து பேசினார். 

அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், ஆளுங்கட்சி மீதான சட்டம் ஒழுங்கு விமர்சனம், நிலுவையில் உள்ள தேர்தல் வாக்குறுதிகள் போன்ற பல்வேறு சிக்கல்கள் திமுக-விற்கு நெருக்கடியை அளித்து வருகின்றன. இவை அனைத்தையும் கடந்து திமுக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க ஒருபுறம் கூட்டணியை பலமாக தக்க வைக்கவும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.