எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், தமிழ்நாட்டின் பெற்றோர்கள் கூறுவது ஒன்றுதான் "படித்தால் முன்னேறிவிடலாம்". தமிழ்நாட்டில் எளிய பின்னணியை கொண்டவர்கள் படிப்பின் மூலமாக, உலகைமே திரும்பிப் பார்க்கும் வகையில், சாதனைகளை படைத்து இருக்கின்றன. அவர்களின் படிப்பு அவர்களின் ஒட்டுமொத்த தலைமுறையை, மாற்றி அமைத்திருக்கிறது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன, அந்தவகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் யு.பி.எஸ்.சி., தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ், தேர்வில் வென்று சாதித்துள்ளனர்.
கடலூர் மாவட்ட விவசாயக் குடும்பம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர், கிராமத்தை சார்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி இளவரசி. இவர்கள் இருவருக்கும் சுஷ்மிதா மற்றும் ஐஸ்வர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. ராமநாதன் முந்திரி விவசாயத்தை செய்து வந்தார். 2004- ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பொருளாதார ரீதியில் பெரும் சேதத்தை இந்த குடும்பம் சந்தித்தது. ராமநாதன் மற்றும் இளவரசி ஆகிய இருவருக்கும், படிப்பு தான் வாழ்க்கை என தொடர்ந்து அறிவுரை வழங்கியுள்ளார்.
மகள்களுடன் தேர்வு எழுதிய தாய்
ராமநாதன் மனைவி இளவரசிக்கு சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்றதால், அவரால் படிப்பை தொடர முடியாத சூழல் இருந்தது. படிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் தாய் இளவரசி, தனது கணவன் ராமநாதன் உதவியுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து டிப்ளமோ பட்டத்தை பெற்றுள்ளார். தொடர்ந்து அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென ஆசைப்பட்ட இளவரசி, தனது இளைய மகள் ஐஸ்வர்யா உடன் சேர்ந்து, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினார். அதன் பிறகு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.
சகோதரிகளின் யு.பி.எஸ்.சி., கனவு
சுஷ்மிதா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் 12-ம் வகுப்பு தேர்வு படித்து முடித்த பிறகு, பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளனர். இதில் ஐஸ்வர்யாவிற்கு மருத்துவராக வேண்டுமென்ற கனவு இருந்தாலும், மருத்துவத்துறை கிடைக்காததால் பொறியியல் துறையில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு ஐஸ்வர்யா, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் யு.பி.எஸ்.சி., பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளனர்.
22 வயதிலேயே சாதித்த ஐஸ்வர்யா
சகோதரிகள் இருவரும் பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற பிறகு, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதினர். இதில் இளைய மகள் ஐஸ்வர்யா முதல் முயற்சியிலே தேர்ச்சி பெற்று சாதித்தார். முதல் முயற்சியில் வெற்றி பெற்றாலும் அவர் விரும்பிய ஐஏஎஸ் கிடைக்காததால் மீண்டும், இரண்டாவதான முறையாக 2019-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வெற்றி பெற்றார். இந்தியாவில் 44கேவது இடமும், தமிழ்நாடு அளவில் 2-வது இடமும் பெற்று அசத்தியிருந்தார்.
விடாமுயற்சியுடன் படித்த சுஷ்மிதா
மறுபுறம் அக்கா சுஷ்மிதா தொடர்ந்து, யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்தார். தொடர்ந்து 5 முறை வெற்றி பெறாமல் இருந்த சுஷ்மிதா, கடந்த 2022 ஆம் ஆண்டு 6-வது முறையாக யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதிய சுஷ்மிதா அகில இந்திய அளவில் 528 வது இடத்தை பெற்று, ஐ.பி.எஸ்., பதவியைப் பெற்றார். இதன் மூலம் ஒரே குடும்பத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் அவரது தாய் அரசு வேலை என குடும்பமாக சாதித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ஐ.ஏ.எஸ்., சுஷ்மிதா ஐ.பி.எஸ்., பணியாற்றுவது எங்கே?
ஐஸ்வர்யா தற்போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். சுஷ்மிதா ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில், உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். திருமணமான பிறகும் குழந்தைகள் பெற்ற பிறகும், தாய் இளவரசி பன்னிரண்டாம் வகுப்பு படித்து, குரூப்_2 தேர்வு எழுதி அரசு வேலையில் பணியாற்றுவதும், சகோதரிகள் இருவரும் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதித்திருப்பதும் பலருக்கு ஊக்கமளிக்கும் கதையாகவே உள்ளது.