தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 


தேசிய தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம்:


இந்நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் இன்று திமுக சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "என்னை ஒப்பிடுகையில் வயது குறைந்தவர் ஸ்டாலின். நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன். நல்ல உடல்நிலையுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். 


ஸ்டாலினுக்கு புகழாரம்:


போற்றத்தக்க தந்தையின் போற்றத்தக்க மகன். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நடப்பவராக ஸ்டாலின் உள்ளார். நவீன தமிழ்நாட்டுக்கான அடித்தளத்தை இதே கொள்கையில் கட்டமைப்பார் என நம்பிக்கை உள்ளது" என்றார்.


தமிழ்நாட்டினை புகழ்ந்து பேசிய கார்கே, "தமிழ்நாட்டின் வரலாற்றில் ராஜாஜி, சத்யமூர்த்தி, காமராஜ், பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பங்கினை மறக்க முடியாது. சமூக நீதி, அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்தை கட்டமைத்து நாட்டுக்கே வழிகாட்டியுள்ளது.


முற்போக்கு மாநிலம் தமிழ்நாடு:


இலவச மற்றும் கட்டாய கல்வி, மதிய உணவு திட்டத்தை அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. எப்பொழுதுமே முற்போக்கு சமூகமாக தமிழ்நாடு இருந்து வந்துள்ளது. தொழில்துறை நலன், மக்கள் நலனில் எப்படி சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது தமிழ்நாடு.


பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான மனோபாவத்தை வளர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் 2004 மற்றும் 2009 மக்களவை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது" என்றார்.


கூட்டணி குறித்து பேசிய கார்கே, "திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து 2024 மக்களவை தேர்தலிலும் மிக பெரிய வெற்றி பெறும். கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தவர் மு.க.ஸ்டாலின்.


பாஜக அரசின் கொள்கைகளால் 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவித்து கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் தொடங்கி வைத்த ஒந்திய ஒற்றுமை நடைபயணம் மாபெரும் வெற்றி பெற்றது.


கூட்டணிக்கு தலைமை தாங்கபோவது யார்?


எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களின் அத்துமீறல் தொடர்கிறது. நீதித்துறையை எப்படியாவது தங்களின் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்திற்கு ஸ்டாலின் தலைமை தாங்குவார். அனைத்து சக்திகளையும் ஸ்டாலின் ஒருங்கிணைப்பார். பிரிவினை சக்திகளுக்கு எதிரான போட்டத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.


2024 தேர்தலுக்கு எதிர்கட்சி கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவார் என்பது பொருட்டல்ல. அனைவரும் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும்" என்றார்.


இந்த கூட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.