தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 31 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. கடந்த 10-ந் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், தினசரி உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 486 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்து வருகின்றனர்.
திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வந்தவர், வனிதா.(55). இவர், தற்போது தஞ்சை மாவட்ட லோக் அதாலத் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நீதிபதி வனிதா தனது சொந்த ஊரான தூத்துக்குடி சென்றார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி வனிதாவும் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் நீதிபதி வனிதாவும், அவரது தந்தையும் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் அவர்களது சொந்த ஊரில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி வனிதா மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ,
“ கொரோனா தொற்று காரணமாக தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில், மக்கள் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி வனிதா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும்,, நீதித்துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.”எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் ஆனந்த்கிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அறிவுக்கூர்மை மிகுந்த கல்வித்தொண்டாற்றிய ஆனந்த்கிருஷ்ணன் மாணவ சமுதாயத்தின் கலங்கரை விளக்கம். அவர் தி.மு.க. ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கு காரணமாக இருந்தவர். அவர் கொடுத்த அறிக்கைதான் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கண்களைத் திறந்தது என்பதை இன்று பொறியாளர்களாக இருக்கும்-மருத்தவர்களாக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற நடுத்தர, ஏழை மாணவர்களும் நன்றாக உணர்வார்கள். அரத்தம் மிகுந்த, அறிவுசார்ந்த கல்விக் கட்டமைப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் தனது இறுதி மூச்சுவரை பயணித்த கல்வியாளரை இழந்திருப்பது, கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.