கல்வியாளரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமாக இருந்தவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 93.
வாணியம்பாடியில் பிறந்த முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன்,தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வியாளர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டவர். கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து, கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி ஐ.நா. மூலம் பல நாடுகளில் கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தனது 62வது வயதில் தமிழகம் வந்த இவரை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்து அந்நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தார் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.
‘தகுதியும் திறமையும் அவசியம்தான்; ஆனால் வாய்ப்புத் தந்து பிறகு சோதிக்க வேண்டுமா அல்லது அதைச்சொல்லி நுழைவாயிலிலேயே தடுத்துவிட வேண்டுமா’ என கேட்ட பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன், தமிழக மாணவர்களின் தொழிற்கல்விக் கனவுகளை காக்க அண்ணா பல்கலை. நடத்தி வந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்து, கடைக்கோடி கிராமத்தில் இருந்து வரும் எளிய ஏழை பிள்ளைக்கும் பொறியியல் படிப்பு படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர்.
பொறியியல் கல்வி சேர்க்கையில் ஒற்றைச் சாளரமுறையை தனது ஆட்சிக்காலத்தில் கருணாநிதி அறிமுகப்படுத்துவதற்கும், தமிழ் இணைய மாநாடு நடத்தி, இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப்படுத்தும் ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தவர். தமிழ்க்கணினியை உலக அளவில் வளர்த்தெடுக்கும் 20 ஆண்டுகாலத்திற்கு மேலான தனது பயணத்தின் மூலம் பல விடைதெரியா கேள்விகளுக்கு திறவுகோலாக இருந்த பேராசியர் மு.ஆனந்தகிருஷ்ணனின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே பேரிழப்பு.
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறும்போது “அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெற்ற போதெல்லாம் கல்வி என்பது சமுகத்தை மேம்படுத்தும் வழியாகவும் சமுகநீதிக்கான பாதையாகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவார்” என கூறியுள்ளார்.
மு.ஆனந்தகிருஷ்ணனின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவர்களின் கலங்கரை விளக்கமென புகழாரம் சூட்டி, கலைஞர் போற்றிய கல்வியாளர் என குறிப்பிட்டுள்ளார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாமக நிறுவனர் ராமதாசு உள்ளிட்டோரும் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.