தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 23,110 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தற்போது கோவிட்-19 பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,39,401-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் நோய்த்தொற்றினால் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா தொடர்பாக இறப்பு எண்ணிக்கை 15,412 ஆக அதிகரித்துள்ளது.  




தற்போதைய இறப்பு விகிதம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டால் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள்  24 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வரை கொரோனா இறப்புகள் பதிவாகலாம் என்று IHME (Institute for Health Metrics and Evaluation) ஆய்வு மையம் கணித்துள்ளது. மாநிலத்தில் முகக்கவசம் மற்றும் சமூக விலகல் நெறிமுறைகள் கடைபிடித்தால் இந்த எண்ணிக்கை  23 ஆயிரம் முதல் 37 ஆயிரம் வரை இருக்கும் என்றும், மோசமான நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த எண்ணிக்கை  27 ஆயிரம் முதல் 47 ஆயிரம் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 


இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப்பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் போராடுகின்றனர். இந்நிலையில் மதுரை, அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 8 மாத கர்ப்பிணியான சண்முகப்பிரியா தன்னுடைய கர்ப்பகாலத்திலும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடி மக்களுக்காவும் போராடி உயிர் நீத்துள்ளார்.




அவரது இறப்புக்கு பலரும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளனர். சண்முகப்பிரியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 






பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்ட இரங்கலில், மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா தாக்குதலுக்கு  உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். 8 மாதங்களாக கருவுற்றிருந்த நிலையிலும், கொரோனா அச்சத்தை ஒதுக்கி மக்களுக்கு சேவையாற்றிய ஈகியர் அவர். அவருக்கு  எனது வீரவணக்கம் எனத் தெரிவித்துள்ளார். சண்முகப்பிரியாவின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.