தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி உள்ள நிலையில் தினசரி பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கி உள்ளது. இதன்காரணமாக கொரோனா நோய் தொற்று குறைவாக பதிவாகும் இடங்களில் தமிழக அரசு சில தளர்வுகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் பரபரப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து தடுப்பூசி போடப்படுவது சுணக்கமானது. ஜூன் 6க்கு பிறகே தடுப்பூசிகள் மீண்டும் கையிருப்பு வரும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
தடுப்பூசி விவரம் குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை, 'மத்திய அரசிடம் இருந்து கடந்த 29ஆம் தேதி வரை 58,410 கோவாக்சின் தடுப்பூசி தமிழகத்திற்கு கடைசியாக வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை 96 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1 வரை 89,32,000 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது வரை உள்ள கையிருப்பில் 4,93,000 தடுப்பூசிகள் இருந்தது. ஆனால் இதற்கு மேலாக தடுப்பூசி போடுவதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டதால் தான் மத்திய அரசு தடுப்பூசி வழங்கும் வரை தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது' என்றது. ஜூன் 1ம் தேதி மாலை சென்னை விமான நிலையத்திற்கு 4,20,570 கோவிஷீல்டு டோஸ்கள் வந்தடைந்தன. இது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான டோஸ்கள் என அறிவிக்கப்பட்டன. பின்னர் தடுப்பூசி குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 1லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், தடுப்பூசி குறித்த கட்டுக்கதைகளை உடைப்பதாக கூறி மத்திய அரசு ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழகத்துக்கு ஜூன் 2 ஆம் தேதி வரை 1 கோடிக்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அறிக்கையின் படி,
''தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
* 2021 ஜூன் 2ம் தேதி வரை, 1 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 93.3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் 7.24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தற்போது உள்ளன.
* ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகளின் மொத்த டோஸ்கள் பற்றிய தகவலும் தமிழகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2021 ஜூன் மாதத்தின் முதல் 2 வாரத்தில் தமிழகத்துக்கு 7.48 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும். அடுத்த 2 வாரத்தில் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் மூலமாக கிடைக்கும்.
* மொத்தம் கிடைக்கும் கொவிட் தடுப்பூசிகளின் அளவு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சராசரி நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு புதிய தாராளமய விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி உத்தியின் கீழ், தமிழகத்துக்கு கிடைக்கும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை குறித்தும் தமிழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தில், 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு, 2021 ஜூன் மாதத்தில் 16.83 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கின்றன'' எனக் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதி செய்தியாளர் சந்திப்பின் போது சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்கு இதுவரை 1 கோரியே 1 லட்சம் தடுப்பூசிகள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது இல்லாமல் தமிழகத்திற்கு மேற்கொண்டு தடுப்பூசி வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதே எண்ணிக்கையை குறிப்பிட்டு கட்டுக்கதையை உடைக்கிறோம் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்திருப்பது பல்வேறு தரப்பினரிடையே விமர்சனத்தை எழுப்பியுள்ளது. மத்திய அரசு கூறிய அதே எண்ணிக்கையைத் தான் தமிழக அரசும் கூறியுள்ளது. இதில் என்ன கட்டுக்கதை என்ன இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
>> தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தினருடன் முதல்வர் ஆலோசனை