முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9 ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். அதிமுக ஆட்சியின் இடைப்பட்ட காலத்தில் மணிகண்டனை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு  எதிராக கடந்த வாரம் நாடோடிகள் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.



அப்புகாரில், அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகக் கூறியுள்ளார். தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் தனியாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் அந்த சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்த புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல்,  பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


அதில்,  திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருவதாகவும்,  மலேஷியாவில் இதுபோல பலரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த முன் ஜாமீன் மனு இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  மணிகண்டனுக்கு, முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மணிகண்டன் மீதான் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் முன் ஜாமின் வழங்க காவல்துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து முன் ஜாமின் வழக்கை ஜூன் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், முன் ஜாமின் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு  நீதிபதி உத்தரவிட்டார்.