அமைச்சர் செந்தில் பாலாஜி  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிராகரிக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமைச்செயலக அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அப்போது தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், கூட்டணி கட்சியினர் நேரில் சென்று பார்த்தனர். 


இந்நிலையில் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதேசமயம் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல்  அமலாக்கத் துறை சார்பில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த 3 மனுக்களையும் நீதிபதி எஸ்.அல்லி உன்று விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், முதலில் அமலாக்கத்துறையின் மனு விசாரிக்கப்பட்டு, பின்னர் ஜாமீன், மருத்துவமனை தொடர்பான மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதனால் அவருக்கு ஜூன் 28 ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட நீதிமன்ற காவல் உறுதியாகியுள்ளது. அதேசமயம் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, இன்றைய தினத்தில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்த பின் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Minister Senthil Balaji : 'இலாகா இல்லாத அமைச்சராகும் செந்தில்பாலாஜி?’ - இன்று வெளியாகிறதா அறிவிப்பு?