தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது. 


2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சென்னை  மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் கிட்டதட்ட 17 மணி நேரம் சோதனை நடத்தினர். சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனையானது நடைபெற்றது. 


இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன் காரணமாக மீண்டும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம்  அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சி மொழித் துறை ஆகியவை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் கவனித்து வந்த பால்வளத் துறை மனோ தங்கராஜூக்கும் வழங்கப்பட்டது.


இந்நிலையில் அமலாகத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 4வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது துறைகள் மற்ற அமைச்சர்களிடம் பிரித்து வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


அதன்படி அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய துறைகள் இருக்கிறது. இவற்றில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாட்டுதுறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு  ஆளுநர் மாளிகையில்  இன்று வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.