தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும். இதற்கு முன் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்  தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில் துறையும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிற்கும் ஒதுக்கப்பட்டது.


மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு மின் துறையும் கூடுதலாக நிதி துறையும் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு, 2006 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றிப் பெற்று  திமுக சார்பாக தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு திருச்சுழி தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு தேர்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டுன் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு தங்கம் தென்னரசு வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து தற்போது அவர் நிதியமைச்சராக இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று அவர் முதல் முறையாக நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்தார்.   


தனது முதல் பட்ஜெட் உரையை ’காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல், மீக்கூறும் மன்னன் நிலம்’  என்ற திருக்குறளை கூறி தொடங்கினார். இந்த திருக்குறளுக்கு குடிமக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவும் கடுமையான சொற்களை கூறாமல் ஆட்சி புரிந்து வரும் அரசனை உலகமே போற்றும் என்றும் அதேபோல் கடைகோடி மக்களும் எளிதில் அணுகக் கூடியவராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றும் அவர் முதல்வருக்கு புகழாரம் சூட்டினார். 


அதனை தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு தொடர்பாக உரையை மேற்கொண்டார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கல் மதியம் 12.08 மணிக்கு நிறைவுபெற்றது. சுமார் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது சற்று தடுமாறிய அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, சபாநாயகர் அப்பாவு அவர் எந்த பக்கத்தில் உரையை நிறுத்தினார் என்பதை கூறி, மீண்டும் உரையை தொடங்க உதவினார். 2  மணி நேர பட்ஜெட்டில் பலரும் வரவேற்கக்கூடிய நிறைய பயனுள்ள திட்டங்களை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், இந்த பட்ஜெட்டில் மாநில பொருளாதார வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை மூலம் 2024-25 நிதியாண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 14.73 சதவிகித வளர்ச்சியுடன் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 173 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வணிக வரி மூலம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 381 கோடி ரூபாய், முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் மூலம் 23 ஆயிரத்து 370 கோடி ரூபாய், மாநில ஆயத்தீர்வுகள் மூலம் 12 ஆயிரத்து 247 கோடி ரூபாய், வாகனங்களின் மீதான வரிகள் மூலம் 11 ஆயிரத்து  520 கோடி ரூபாயும் கிடைக்கப் பெறும். மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயாக 30 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் முற்றிலும் நின்று விடும். ஒன்றிய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு 49 ஆயிரத்து 750 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.