Tamil Nadu Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, 2023-24 நிதியாண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரத்து 75 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், திருத்த மதிப்பீட்டில் அது 94 ஆயிரத்து 60 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 3.25 சதவிகிதமாக கணக்கிடப்பட்டு இருந்த நிதிப்பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 3.45 சதவிகிதமாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
2024-25 வரவு செலவு திட்டங்கள்:
மாநில பொருளாதார வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை மூலம் 2024-25 நிதியாண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 14.73 சதவிகித வளர்ச்சியுடன் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 173 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வணிக வரி மூலம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 381 கோடி ரூபாய், முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் மூலம் 23 ஆயிரத்து 370 கோடி ரூபாய், மாநில ஆயத்தீர்வுகள் மூலம் 12 ஆயிரத்து 247 கோடி ரூபாய், வாகனங்களின் மீதான வரிகள் மூலம் 11 ஆயிரத்து 520 கோடி ரூபாயும் கிடைக்கப் பெறும். மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயாக 30 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் முற்றிலும் நின்று விடும். ஒன்றிய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு 49 ஆயிரத்து 750 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வருவாய் செலவினம் - ரூ. 3,48,289 கோடி
வருவாய் பற்றாக்குறை - ரூ.49,278.73 கோடி
ஊதியச் செலவினங்கள் - ரூ. 84,931 கோடி
சம்பளம் அல்லாத செலவினங்கள் - ரூ.15,013 கோடி
ஓய்வூதிய பலன்களுக்கான செலவுகள் - ரூ.37,663 கோடி
மானியங்கள் , உதவி மானியங்கள் வழங்குவதற்கான மதிப்பீடுகள் - ரூ.1, 46,908 கோடி
பொதுக்கடனுக்கான வட்டித்தொகை - ரூ.63,722 கோடி
மூலதனச் செலவினம் - ரூ.47, 681 கோடி
இழபீட்டுத் தொகை நீங்கலாக வருவாய் பற்றாக்குறை - ரூ. 34 ஆயிரத்து 834 கோடி
நிதிப்பற்றாக்குறை 3.44 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடன் விவரங்கள்:
பட்ஜெட் அறிக்கையின்படி, ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2024-25 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,55,584.48 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 49,638.82 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக்கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2025 அன்று நிலுவையில் உள்ள கடன் 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இது 26.41 சதவீதம் ஆகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் விகிதம் 2025-26 ஆம் ஆண்டில் 25.75 சதவீதமாகவும், 2026-27 ஆம் ஆண்டில் 25 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.