'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும் கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.

 

கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. தற்போது கீழடியில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பாக 7-ஆம் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டது.



தற்போது மணலூரில் அதிகளவு தொல்லியல் பொருட்கள் கிடைக்கவில்லை என அங்கு மட்டும் ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி துவங்கிய தொல்லியல் ஆய்வு அக்டோபர் மாதத்தை கடந்து அகழாய்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.  கீழடியில் அதிகளவு நீர் நிலை அமைப்பு இருந்தற்கான சான்றுகள் கிடைத்து வருகிறது. கொந்தகையில் முதுமக்கள் தாழிகளுடன் கூடிய எலும்புகள் கிடைத்து வருகின்றனர். இந்நிலையில் அகரம் பகுதியில் சுடுமண்ணால் தயார் செய்யப்பட்ட முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அமைச்சார் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.




மேலும் இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில்..., " கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் தலா 8 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கு முதுமக்கள் தாழி, எலும்புக்கூடுகள், பானைகள், பழங்கால வாள், விளையாட்டு பொருட்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. செப்டம்பர் மாதத்துடன் பணிகள் முடிவடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




 

கொரோனா காலகட்டத்தில் அதிகளவு வேலை நடைபெறவில்லை என்பதால் டிசம்பர் மாதம் வரை அகழாய்வுக்கு நேரம் ஒதுக்கவேண்டும். கீழடியில் உள்ள ஒரு குழியில் சமீபத்தில் சிவப்பு நிற சிறிய பானை கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் அகரத்தில் சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.