மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் "கீழடியில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் நகர நாகரீகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியில் நடந்த அகழாய்வு பணிகள் உலக அளவில் கவனம் பெறத்தொடங்கின. இந்நிலையில் கீழடி ஆய்வை முன்னின்று நடத்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒடிசாவுக்கு மத்திய தொல்லியல் துறையால் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் வெளியாகின.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேசிய இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,
‘’கீழடியை மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் கீழடியைப் புறக்கணித்தனர். அதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் தமிழ்நாடு தொல்லியல்துறை கீழடியில் ஆய்வு செய்கிறது. இதே வட மாநிலங்களில், இப்படியான விஷயங்கள் கிடைத்திருந்தால் பாஜக அரசு இவ்வாறு சும்மா இருந்திருக்குமா?’’
மத்திய தொல்லியல்துறை ஆய்வு மேற்கொண்டால் தான் உலக அரங்கில் தமிழர்களின் பெருமை வெளிப்படும். ஆனால், அதை பாஜக அரசு தடுக்கிறது. கீழடியில் மத்திய தொல்லியல்துறை நடத்திய ஆய்வு முடிவுகளை தற்போதுவரை வெளியிடவில்லை. தமிழர்களின் பெருமை வெளியே செல்லக் கூடாது. ஆனால், தமிழர்களின் ஓட்டு மட்டும் பாஜகவுக்கு வேண்டுமா” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதே மேடையில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய இருவரையும் மண்குதிரை என்றெல்லாம் விளாசித் தள்ளினார். இந்நிலையில் தற்போது தி.மு.க பொறுப்பேற்று 100 நாட்களை தொட்ட நிலையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமணல், அரியலூர் மாவட்டம், கங்கை கொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை என ஏழு இடங்களிலும் அகழாய்வுப் பணிகளை வேகப்படுத்தி உள்ளது. இந்த அகழாய்வுப் பணிகளை தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கீழடி அகழாய்வு இயக்குநர் சிவானந்தமும் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
தமிழரின் தாய்மடி என போற்றப்படும் கீழடியில் தற்போது 7ஆம் கட்ட அகழாய்வுப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மூன்று கட்ட அகழாய்வை செய்த மத்திய தொல்லியல் துறையானது கீழடி ஆய்வை கைவிட்டது. தொடர்ந்து அ.தி.மு.க அரசு கீழடிக்கு சிறப்பு நிதி ஒதுக்கி அகழாய்வு செய்தது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 7ஆம் கட்ட அகழாய்வை துவக்கி வைத்தார். தொடர்ந்து தி.மு.க அரசு பொறுப்பேற்றதற்கு பின் அமைச்சர்கள் கீழடியில் தொடர்ந்து விசிட் அடித்து வருகின்றனர்.
கீழடியில் உள்ள தென்னந்தோப்பிற்குள் 110 ஏக்கருக்கு மேற்பட்ட விரிந்த பரப்பில் பண்டைய குடியிருப்பு புதையுண்ட மேட்டுப்பகுதி ஒன்று காணப்படுகிறது. தமிழகத்தில் கோயில் நகரம் என்றழைக்கப்படும் மதுரையிலிருந்து கிழக்கு தென்கிழக்காக 13 கி.மீ. தொலைவில் உள்ளது கீழடி. மதுரைக்கு அருகில் இருந்தாலும் கீழடி புண்ணிய ஸ்தலமான திருப்புவனத்திற்கு உட்பட்டு வருவதால் சிவகங்கை மாவட்டத்தில் இணைகிறது.
கீழடியில் இருந்து 2 கி.மீ தொலைவில் வைகை அமையப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. 7ஆம் கட்ட அகழாய்வில் பகடைக்காய், ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள் நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, சுடுமண் மணிகள், காதணி, கண்ணாடி மற்றும் சங்குகளினால் செய்யப்பட்ட வளையல்கள், கண்ணாடிகளால் செய்யப்பட்ட குறு மணிகள் போன்ற அணிகலன்கள், சூதுபவளம் படிகம் போன்ற கற்களால் செய்யப்பட்ட மணிகளும் சிறிய அளவிலான தங்க கம்பியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மிகச் சிறிய அளவுள்ள பொருட்களை நிறுக்கும் ஒரு கிராமிற்கும் கீழ் எடையுள்ள எடைக்கல்லும் கிடைத்துள்ளது. சுடுமண் முத்திரை, அரிவாள், ஆணி, சிறிய செப்பு மோதிரம் மற்றும் கற்கோடரி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. இவற்றுடன் முழுமையான பானை, கிண்ணங்கள், மெருகேற்றப்பட்ட சிவப்பு வண்ணப் பானைகள், உடைந்த செங்கற்கள், கூரைஓடுகள் ஆகியவையும் வெளிகொணரப்பட்டுள்ளன. அழகியவேலைப்பாடுகளுடன் இருவரி கயிறு வடிவமைப்பு கொண்ட இரட்டை வடத்துடன் அலங்கரிக்கப்பட்ட உறைகிணறு கிடைக்கப்பெற்றுள்ளன.
சுடுமண் உறையில் வெளிப்புறத்தில் கயிறு போன்ற அலங்கார வடிவமைப்பு இருப்பதால் சுடுமண் உறை கிணறாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. தொடர்ந்து அகழப்பட்ட பொழுது உறை கிணறு பெரும்பானை உள்ளிட்டவை வருகின்றன. தொடர்ந்து கீழடி மற்றும் அதன் தொடர்சியாக கிடைக்கும் தொல்லியல் விசயங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது இணைய பக்கங்களில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்.
அ.தி.மு.க அரசு இழுத்து வந்த 'கீழடி' தொல்லியல் தேரை தி.மு.கவும் வழிநடத்தி செல்கிறது. கீழடியில் நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணி மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் "ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கீழடி, சிவகளை அகழாய்வு பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்படும். கீழடி, கொடுமணல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுப் பகுதிகள் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப் படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு அரசின் தற்போதைய தொல்லியல் செயல்பாடுகள் குறித்து, கீழடி அகழாய்வு தொடர்பாக பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்திய சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதியிடம் பேசினோம்.
தொல்லியல் ஆய்வுகளுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கியது மகிழ்ச்சியானது. ஆனால் இன்னும் கூடுதலான தொகையை ஒதுக்கி இருக்கலாம். நாகரீகங்களை அறிந்துகொள்ளும் வகையில் கீழடி பகுதியில் பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும். கீழடி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்கள் இன்னும் அகழாய்வு செய்யமுடியாத அளவிற்கு இடங்கள் இருக்கின்றது. அதனால் அதற்கு உரிய தொகை கொடுத்து இடங்களை வாங்கி அகழாய்வு செய்ய வேண்டும்.
அதே போல் அகழாய்வு செய்யும் இடங்களில் அமைப்புகள் மாறாமல் அங்கேயே காட்சிப்படுத்த வேண்டும். அதற்கு அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும். தற்போது கொரோனா சூழலில் சற்று சிரமமான ஒன்றுதான். கொரோனா சூழலில் பின்பாக இது போன்ற விசயங்களை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்" என்றார்.
'கீழடியில் தற்போது ஒரு வால் அளவு தான் கண்டறிந்துள்ளோம். இன்னும் தொடர்ந்து பல ஆய்வுகளை செய்ய வேண்டி இருக்கிறது' என எழுத்தாளரும், மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் குறிப்பிடுகிறார். எனவே கீழடி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய மத்திய தொல்லியல்துறை களத்தில் இறங்கினால் தான் கீழடியின் பெருமை உலக அரங்கில் எடுபடும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தி.மு.க அரசு மத்திய அரசிடம் இதன் முக்கியத்துவத்தை விளக்கி அழகாய்வு மேற்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !