இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் 29ஆம் தேதி, சுரங்க நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலத்தை மத்திய அரசு தொடங்கியது.


அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.


நிலக்கரி சுரங்க ஏல விவகாரம்:


குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி, மகாதேவபட்டணம், உள்ளிகோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ் குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அதேபோல, சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் கடலூர் மாவட்டத்தில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அரியலூர் மாவட்டத்தில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், திட்டத்திற்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்தனர்.


தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்:


பின்னர், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து திட்டம் குறித்து விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஏறத்தாழ 3,700 கோடி ரூபாய் முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் இந்த திட்டத்தை திமுக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்த காலத்தில் 2011ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தததை மேற்கொண்டது.


அப்போது, மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படை காரணம் இத்திட்டத்தின் வாயிலாக வாட் போன்ற வரிகள் மூலமாக மாநில அரசின் உயரும் என்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்திலேயே மிக குறிப்பாக, இந்த திட்டத்தின் வாயிலாக எழும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முறையாக ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டது. 


சுற்றுச்சூழல் ஆய்வின்போது பாதிக்கப்பட கூடிய ஊழவர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுடைய நிலம் பாதிப்பு அடையும் என்று விவசாயிகள், டெல்டாகாரர்கள் அன்றைக்கே எதிர்த்தார்கள். அப்படி எதிர்ப்பு வந்தபோது கூட விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறை ஏவிவிடப்பட்டது" என்றார்.


மேலும் படிக்க: RR vs PBKS, IPL 2023 LIVE: பந்து வீச்சு தாக்குதலை தொடங்கிய ராஜஸ்தான்.. கட்டுக்கோப்பான ஃபீல்டிங்கில் அசத்தல்..!