சேலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வருவது மாம்பழம். மாம்பழம் சாகுபடியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவு மாம்பழம் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மா மரங்கள் அதிக அளவில் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாபட்டினம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், வரகம்பாடி மற்றும் மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மா மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தப் பகுதிகளில் சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம் பசந்த், அல்போன்சா, நடுசாலை, குதாதத் உட்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் விளைகிறது. சேலம் சந்தைகளுக்கு வரும் மாம்பழங்கள் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், துபாய் உட்பட உலகில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இத்தகைய சிறப்பு மிக்க சேலம் மாம்பழம் மாறுபட்ட சீதோசன நிலை காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மாமரங்கள் நல்ல முறையில் பூ பூத்தது. இந்த நிலையில் திடீர் காலநிலை மாற்றத்தால் டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் மாமரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடக்கத்திலிருந்தே மாம்பழம் வரத்து சரிந்து வந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சேலம் சந்தைகளில் மாம்பழங்களில் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் சேலம் சந்தைகளில் விற்பனைக்கு வரும் மாம்பழம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியும் இதுவரை சரியான அளவிற்கு மாம்பழங்கள் வரத்து இல்லை. இதன் காரணமாக சேலம் சந்தையில் விற்பனை செய்யப்படும் மாம்பழத்தின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாம்பழ விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக மாமரங்களில் ஆண்டின் இறுதியில் பூக்கள் பூக்கத் தொடங்கும். இந்த ஆண்டு அதேபோல டிசம்பர் மாதத்தில் தொடர் மழை காரணமாக அதிக அளவில் பூக்கள் பூத்திருந்தன. ஆனால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மழை குறைந்துவிடும். நடப்பாண்டில் ஜனவரி மாதம் முழுவதும் மழை தொடர்ந்ததால் பூக்கள் மரத்தில் இருந்து விழத்தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 30 டன் முதல் 50 டன் வரை மாம்பழம் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் இங்கு பறிக்கப்படும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாம்பழ வரத்து குறைந்துள்ளதால் சந்தையில் தேவைக்கும் குறைவான அளவில் மாம்பழங்கள் வருகின்றது. இதனால், மாம்பழங்களின் விலை உயரும் நிலை உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.