வருகின்ற ஜனவரி மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான அரசு, ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பமும் விநியோகம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள், யார் யார் உரிமை தொகையை பெறுவதற்கு தகுதியானர்கள் உள்பட பல வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் வெளியிட்டது. இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15 -ஆம் தேதி இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் 1 கோடியை 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக பணம் செலுத்தப்பட்டது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தவர்களில் ஒரு சிலர் நிராகரிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பெண்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி, தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.
பெண்களுக்கு இதனை ஒரு உதவித்தொகையாக கொடுக்கவில்லை, உரிமைத்தொகையாக கொடுக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஜனவரி முதல் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்திருந்தார்.
இதுவரை எத்தனை கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர்..?
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி (அறிஞர் அண்ணா பிறந்தநாள்) தொடங்கி வைத்தார். அப்போது சுமார் தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாதம் ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கலைஞர் மகளிர் உதவித்தொகை விடுபட்டவர்களுக்கு கடந்த 10ம் தேதி 2-வது கட்டமாக பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 7 லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டது. இதையடுத்து, மொத்தமாக இரண்டு கட்டங்களையும் சேர்த்து சுமார் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இதுவரை மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.