அதிமுக ஆட்சியில் மழைக்காலத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் திமுக ஆட்சியை குறை சொல்ல இபிஎஸ் மற்றும் ஜெயகுமாருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார். 


மேற்கு மாம்பலம், அரங்கநாதன் சப்வே அருகில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் காலை 9.30 எம்ஜிஎம் மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் மழைக்கால மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த 6 ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.  இன்று 357 இடங்களில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 16516 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7,83,443 பேர் பயனடைந்துள்ளதாகவும், 2958 பேருக்கு காய்ச்சலும், 1620 பேருக்கு சளி இருமலும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 2ஆயிரத்திற்கும் மேல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவனைகளிலும், மருத்துவ முகாம்களிலும் அனைத்து மழைக்கால சிகிச்சைகளுக்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.  சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையிலான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. இன்று 7 தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் மருத்துவ முகாம்களில் பரிசோதனைகளை செய்து பயனடைய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  வேண்டுகோள் விடுத்தார். 


தொடர்ந்து பேசிய அமைச்சர், ஜனவரியில் இருந்து தற்போது வரை 7662 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெங்கு பரவலை தடுக்க கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1250 முகாம்கள் நடப்பு நிதியாண்டில் நடத்த அறிவிக்கப்பட்டது. அதில் 1083 முகாம்கள் இதுவரை  நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,76,832 பேர் பயனடைந்துள்ளனர். நிவாண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், வெறும் கரன்டியில் பாத்திரம் சுழற்றுவது சுலபம். அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாடாளுமன்றமே 2015 வெள்ளத்தினை Man made flood என்று சொல்லப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெயகுமாருக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் சென்னையை பொறுத்தவரை எங்கெல்லாம் மழைநீர் வடிகால் பணிகள் கட்டப்பட்டதோ, அங்கெல்லாம் தண்ணீர் வடிந்துவிட்டது. மழை பெய்த முதல் நாளில் சென்னையின் 4 நீர்நிலைகளான கொசஸ்தலை ஆறு,  அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய்களில் சென்ற மழைநீர் கடலில் உள்வாங்கவில்லை. கடலில் மையம் கொண்டிருந்த புயலால், கடல் சீற்றம் கொண்டிருந்தது. அதன் காரணமாக கடலில் 7 முதல் 8 அடிக்கு அலை உயர்ந்தது, அதன் காரணமாகதான் மழைநீர் கடலில் கலக்கவில்லை. சென்னையில் எங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது என்று சொன்னால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்” அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.