எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் ஒருந்து மீன்பிடிக்க சென்ற 25 பேர் 2 படகுகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். பருதித்துறை கடற்பரப்பில் இருந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை அளித்த போதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். மேலும், மீனவர்கள் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி செல்போன் மற்றும் 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட பொருட்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. மீனவர்கள் சங்கம் தரப்பில் மத்திய மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.