தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  மாலத்தீவு  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக அதிகனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது, அதுமட்டுமின்றி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை 50% கூடுதலாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


அரபிக்கடல் பகுதிகள்:


இன்று  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.