மூன்று இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு மருத்துவ குழுவின் முழுமையான கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரின் இன்று காலை 5 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை இன்று நடைபெற்றது. தலைமை மருத்துவர் ரகுராமன் (மூத்த அறுவை சிகிச்சை நிபுணர0BCD) தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய அறுவை சிகிச்சை நடைமுறை சுமார் 5 மணிநேரம் நீடித்து 10 மணியளவில் நிறைவடைந்தது. அவர் தற்போது மயக்க நிலையில் இருப்பதாகவும் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையின் போது ரத்த நாளங்களில் இருந்த 3 அடைப்புகள், புதிய ரத்த நாளங்கள் (grafting) பொருத்தப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மருத்துவமனை அறிக்கையில், “ மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, இதயத்துடிப்பு நிறுத்தப்படாமல் இதயத் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை நிபுணர் A ரகுராம் மற்றும் அவரது குழுவினர் இன்று காலை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். நான்கு பைபாஸ் இரத்தக்குழாய்கள் வைக்கப்பட்டு இதயத்தின் இரத்த ஓட்டம் மறுசீரமைக்கப்பட்டது. அமைச்சர் தற்போது நலமாக உள்ளார். அறுவைசிகிச்சைக்குப் பிறகான தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.