தலைமைச் செயலகத்தில் செந்தில்பாலாஜி அறைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் கடந்த சிலநாட்களுக்கு முன் சோதனை நடத்தினர். சுமார் ஒரு வாரத்திற்கும் மேல் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அமலாக்கத்துறையினர். 


தலைமைச் செயலகத்தில் மத்திய அரசு நிறுவனம் சோதனை நடத்துவது இது இரண்டாவது முறை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தவர் ராம் மோகன் ராவ். முதன்மைச் செயலாளராக இருந்த அவர், சீனியாரிட்டியில் அவருக்கு முன் 16 பேர் முன்னிலையில் இருந்த போதும், அவர்களைத் தாண்டி கடந்த 2016ம் ஆண்டு தலைமைச் செயலாளரானார். அப்போதே பலருக்கு சந்தேகம் எழுந்தது. அவருக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் பல்வேறு அதிர்ச்சிகள் அரங்கேறியது. அதில் ஒன்று தான் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனை. 


ராம் மோகன் ராவ் மற்றும் அவரது மகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி பணமும், தங்கமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து தான் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்தது வருமானவரித்துறை. ராம் மோகன் ராவ் தொடர்புடைய இடங்களில் சோதனையிட்டதில் சேகர் ரெட்டி தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதனையடுத்து ராம் மோகன் ராவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு வரலாற்றில் ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முதல் தலைமைச் செயலாளரானார் ராம் மோகன் ராவ். தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த அப்போதைய எதிகட்சித்தலைவர் ஸ்டாலின், ''கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை; இந்நிலையில் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இது மாலத்திற்கே தலைகுனிவு'' என்று கூறியிருந்தார். வைகோவோ,  “தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம் மோகனராவ் வீட்டிலும். தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தி இருப்பது, தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத நடவடிக்கை ஆகும். அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஊழலில் ஈடுபட்ட எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசுடைமை ஆக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.


2016ல் தலைமைச் செயலகத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனைக்குப் பிறகு, தற்போது மத்திய அரசின் மற்றொரு அங்கமான அமலாக்கத்துறை தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.