பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி, அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்த, அதிமுக தலைமை சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கண்டனத்தினை தெரிவித்திருந்தார். அதற்கு தமிழ்நாடு பாஜக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. 


இந்நிலையில், அதிமுக சார்பில் இன்று அதாவது ஜூன் 13ஆம் தேதி நடத்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினர். 


இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவர் கரு. நாகராஜன் செய்தியாளர் சந்திப்பில், அண்ணாமலையின் வளர்ச்சியை அதிமுக விரும்பவில்லை. அண்ணாமலை மீது கண்டனத் தீர்மான கொண்டு வந்ததை நாங்கள் எதிர்க்கிறோம் என கூறினார். 


மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழக மக்கள் மனதில் மாற்றத்தை தரக்கூடிய தலைவர் அண்ணாமலை என்ற நிலையை அவரே ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலையை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு சக்தியோ, அற்றலோ பலமோ அல்லது மக்களின் தலைமையை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு பிரநிதித்துவமோ கிடையாது. அண்ணாமலை குறித்து பேசும் தகுதி கூட அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு கிடையாது. தஞ்சாவூர் பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம், கோமாளியாகவும் வைக்கலாம் என தெர்மாகோல் முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது தான் கோமாளித்தனமாக உள்ளது என கூறினார். 


அதேபோல், சி.வி. சண்முகம் தான் என்ன பேசினார் என அவரையே திரும்பக் கேட்டால் அவருக்கே தெரியாது. அவர் பேசியது அனைத்துமே அபத்தமானது. இது அனைவருக்கும் தெரியும். அண்ணாமலை என்பவர் தனிநபர் அல்ல. தமிழ்நாடு பாஜக என தனிக் கட்சி கிடையாது. பாஜக என்பது தேசிய கட்சி. அதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை. பாஜகவில் கட்சிப் பதவியை விட, மக்கள் பணிக்கு தான் முன்னுரிமை. அதனை திறம்பட செய்பவர் அண்ணாமலை என்று மக்கள் அவருக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், ஆற்றல் மிகு அவரின் செயல்பாடுகளைப் பார்த்து பொறாமைப் பட்டு காழ்புணர்ச்சியோடு, உள்நோக்கத்தோடு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசுவதை நிறுத்தவேண்டும் என்றார்.  மேலும், கூட்டணியில் சின்ன கட்சி பெரிய கட்சி என எதுவும் இல்லை. அதேபோல் கூட்டணியில் பெரியண்ணன் வேலை யாருக்கும் இல்லை என கூறினார். 


அதிமுக தலைவர்களும் தமிழக பாஜக தலைவர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சரமாறியாக கூறிவருவதால் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக மாறியுள்ளது. குறிப்பாக இரண்டு கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.