Minister Senthil Balaji: சட்டவிரோதமாக பணப்பரிவர்தனை செய்ததாக கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் தொடர்கிறது. 


இதற்கிடையே, உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் அவர், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.


இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், அமலாக்கத்துறை தரப்புக்கும் செந்தில் பாலாஜி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.


"நீங்க ஏன் பாஜகவுல இணையக்கூடாது"


தாங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டதாக கபில் சிபல் குற்றஞ்சாட்டினார்.









 


தொடர்ந்து வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு, "சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமோ சாட்சிகளோ இல்லை. பாஜகவின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என தெரிவித்தது. 


இதற்கு பதில் அளிக்கும் விதமாக வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு, "அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்ததற்கான மின்னனு ஆதாரங்கள் உள்ளது" என தெரிவித்தது. ஆனால், அமலாக்கப்பிரிவு கைபற்றிய பல மின்னனு ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவ்'ல் இருந்த 284 பைல்களில் 222 பைல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டியது.


புதிதாக 441 பைல்கள் குறிப்பிட்ட பென் டிரைவ்'க்குள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் பென் டிரைவ்கள் சட்ட விரோதமாக 6 நாட்கள்  அமலாக்கத்துறையிடம் இருந்ததாகவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.


"அமலாக்கபிரிவு கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் நடத்திய விசாரணையின் மூலம் கிடைத்தது அல்ல. மத்திய குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டது. 1.34 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வருமான வரி கணக்கை பார்த்தால் உண்மை தெரியும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார். உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும்" என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.


அமலாக்கத்துறை வாதம்:


இதை தொடர்ந்து வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு, "லஞ்சமாக பெற்ற பணம் வங்கி பரிவர்த்தனை மூலமாக நடந்தால் மட்டுமே வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி ரொக்கமாக கூட பெற்றிருக்கலாம். செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி முடித்தாலும் கூட சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்க முடியாது. 
வேறு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்கிட முடியாது" என தெரிவித்தது.


இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த மனு மீதான விவாதத்திற்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.